கள்ளச்சாராய விற்பனையை தடுக்க 17 கிராமங்களில் போலீசார் கண்காணிப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க, 17 கிராமங்களில் மதுவிலக்கு போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
விஷச்சாராய பலி
விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷச்சாராயம் குடித்தவர்களில் இதுவரை 22 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் 58 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விஷச்சாராயம் குடித்ததில் சிலருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து விஷச்சாராய விற்பனையில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் மாநிலம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க வேண்டும். கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதன்படி தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
17 கிராமங்களில் கண்காணிப்பு
அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் திண்டுக்கல் மதுவிலக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜன் தலைமையில், கள்ளச்சாராயத்தை தடுக்க பல்வேறு பகுதிகளில் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் மலையடிவாரம் மற்றும் ஓடைப்பகுதிகளுக்கு அருகே இருக்கும் கிராமங்களில் திடீர் சோதனை நடத்துகின்றனர். மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்ட 17 கிராமங்களில் போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். இந்த கள்ளச்சாராய வேட்டையில் மதுவிலக்கு போலீசாருடன் கலால்துறை அதிகாரிகளும் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.