தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்


தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்
x
தினத்தந்தி 13 Nov 2022 12:15 AM IST (Updated: 13 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மத்திய, மாநில அரசுகள் தாயகம் திரும்பிய தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தினார்.

நீலகிரி

கூடலூர்,

மத்திய, மாநில அரசுகள் தாயகம் திரும்பிய தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தினார்.

தொழிலாளர்களுடன் சந்திப்பு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டைமான் கூடலூர் பகுதியில் உள்ள நடுவட்டம், பாண்டியாறு, தேவாலா, சேரங்கோடு, கொளப்பள்ளி டேன்டீ தோட்டங்களில் பணியாற்றும் தாயகம் திரும்பிய தொழிலாளர்களை நேற்று சந்தித்து பேசினார். அப்போது டேன்டீயை வனத்துறையிடம் ஒப்படைத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இளமை காலம் முழுவதும் தேயிலை தோட்டத்தில் பணியாற்றி விட்டு, ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் குடியிருப்புகளை காலி செய்ய வேண்டுமென நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது என தொழிலாளர்கள் கூறினர்.

அப்போது தொழிலாளர்கள் மத்தியில் செந்தில் தொண்டைமான் பேசியதாவது:-

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின்படி 5 லட்சம் தொழிலாளர்கள் கூடலூர், கோத்தகிரி, கொடைக்கானல், கேரளா, அசாம், அந்தமான் நிக்கோபார் உள்பட பல்வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டனர். நாடோடிகளாக இடம் மாறி தாயகம் திரும்பிய தொழிலாளர்கள் அந்நிய செலாவணியை ஈட்டு வகையில் பணியாற்றி வருகின்றனர். லாபகரமாக இருந்த நிலையில் டேன்டீ நிர்வாகம் கடந்த காலங்களில் முறையாக செயல்படாததால் நஷ்டத்தை சந்தித்து வருகிறது.

வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்

வளர்ந்த நாடான இந்தியாவில் தேயிலை தோட்டங்கள் அழிக்கப்பட்டு காடுகளாக மாற்றப்படுகிறது. இதுசம்பந்தமாக பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட அனைத்து தலைவர்களை சந்தித்து தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தப்படும். டேன்டீயை வனத்துறையிடம் ஒப்படைக்க கூடாது. இல்லையெனில் தோட்ட தொழிலாளர்களுக்கு நிலத்தை வழங்க வேண்டும்.

மேலும் அவர்களுக்கு வீடு வழங்க வேண்டும். இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு பங்கு உண்டு. தாயகம் திரும்பிய தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு உலக அளவில் குரல் கொடுக்க, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் பேசினார். அப்போது கூடலூர் எம்.எல்.ஏ. போன் ஜெயசீலன் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் உடன் இருந்தனர்.



Next Story