வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்குவதற்காக அரசுக்கு நிலம் கொடுக்க முன்வந்தால் நியாயமான இழப்பீடு
வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீ்ட்டுமனை வழங்கவதற்காக அரசுக்கு நிலம் கொடுக்க முன்வந்தால் நியாயமான இழப்பீடு வழங்கப்படும் என தேனி கலெக்டர் தெரிவித்தார்.
தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு அரசின், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையில் இருந்து ஆண்டுதோறும் நிலமற்ற பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் இன மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தேனி மாவட்டத்தில் இந்த நிதியை பயன்படுத்தி நில எடுப்பு செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. வீடு இல்லாத பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் இன மக்களுக்கு நிலம் வழங்க விருப்பம் உள்ள நில உரிமையாளருக்கு, நியாயமான இழப்பீட்டு உரிமை மற்றும் வெளிப்படையான நிலம் கையகப்படுத்துதல், புனர்வாழ்வு மற்றும் மீள் குடியேற்ற சட்டம் 2013-ன் படி நில எடுப்பு செய்ய இருப்பதால் நில உரிமையாளர்களுக்கு அடிப்படை நில மதிப்புடன், அந்த நிலத்தில் இருக்கும் கட்டுமானங்களுக்கும், மரங்களுக்கும் மதிப்பீடு நிர்ணயித்தும், அவற்றிற்கு ஆறுதல் தொகையையும் சேர்த்து வழங்கப்படவுள்ளது.
இதனால் நில உரிமையாளருக்கும் நியாயமான இழப்பீட்டுத் தொகை கிடைக்கும். எனவே, நல்ல அணுகுசாலை உள்ள நிலமாகவும், உறவுகளுக்குள் சொத்து பிரச்சினை இல்லாத நிலமாகவும், நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணையில் இல்லாத நிலமாகவும், தனிநபர் பட்டாவாக உள்ள ஒரு ஏக்கருக்கும் மேற்பட்ட நிலம் இருந்து, அதனை நிலமில்லா ஏழை பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் இன மக்களுக்கு வழங்க விருப்பம் இருந்தால் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம். நிலம் வழங்க விருப்பம் உள்ள நில உரிமையாளர்கள், கிரையப்பத்திரம் மற்றும் பட்டா நகல்களுடன் பெரியகுளம், உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் மற்றும் தேனி ஆதிதிராவிட நல தனி தாசில்தார் (நில எடுப்பு) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.