விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க 20 ஆயிரம் மரக்கன்றுகள் தயார்: வேளாண்மை அதிகாரி தகவல்
விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க 20 ஆயிரம் மரக்கன்றுகள் தயாராக உள்ளதாக வேளாண்மை அதிகாரி தெரிவித்தார்.
தேனி வேளாண்மை உதவி இயக்குனர் ராமசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேனி வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கு பசுமை போர்வை இயக்கத்தின் கீழ் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்காக குமில், மகாகனி, வேங்கை, பெருநெல்லி, நாவல் ஆகிய மரக்கன்றுகள் சுமார் 20 ஆயிரம் தயார் நிலையில் உள்ளன. தற்போது பெய்து வரும் பருவமழையை கொண்டு நடும்போது, இவை நன்கு வளர ஏதுவாக இருக்கும். அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் அம்பாசமுத்திரம், கொடுவிலார்பட்டி, தப்புக்குண்டு, பூமலைக்குண்டு, தாடிச்சேரி, அரண்மனைப்புதூர், குப்பிநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் மரக்கன்றுகள் வழங்கப்படும்.
ஒரு ஏக்கருக்கு 125 மரக்கன்றுகள் வீதம் அதிகபட்சம் ஒரு விவசாயிக்கு 500 மரக்கன்றுகள் வரை வழங்கப்படும். மரக்கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்து, சிட்டா, ஆதார் எண், வங்கி கணக்கு புத்தக நகல், புகைப்படம் ஆகியவற்றுடன் தங்கள் பகுதியில் உள்ள உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.