முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த பேபி அணையை பலப்படுத்தும் பணிகள் எப்போது தொடங்கும்? விவசாயிகள் எதிர்பார்ப்பு


முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த  பேபி அணையை   பலப்படுத்தும் பணிகள்   எப்போது தொடங்கும்?  விவசாயிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 6 Nov 2022 12:15 AM IST (Updated: 6 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த பேபி அணையை பலப்படுத்தும் பணிகள் எப்போது தொடங்கும் என்று விவசாயிகள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

தேனி

19-ம் நூற்றாண்டில் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் ஏற்பட்ட கடுமையான பஞ்சத்தால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அப்போதைய ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் 1810 முரிதல் 1811-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஏற்பட்ட பஞ்சம் மற்றும் தொற்றுநோய் பாதிப்புக்கு 56 ஆயிரத்து 135 பேர் பலியானார்கள். விவசாயமும் அடியோடு பாதிக்கப்பட்டது.

முல்லைப்பெரியாறு அணை

அப்போதைய ஆங்கிலேய அரசு, பஞ்சத்தை போக்கவும், விவசாய பொருட்கள் உற்பத்தியை பெருக்கவும் மேற்கு தொடர்ச்சி மலையில் முல்லைப்பெரியாற்றில் அணை கட்ட திட்டமிட்டது.

தமிழக-கேரள மாநில எல்லையில் 1796-ம் ஆண்டு கால கட்டத்தில் ராமநாதபுரம் சேதுபதி முயற்சித்து பார்த்து கைவிட்ட முல்லைப்பெரியாறு அணை திட்டத்தை ஆங்கிலேய அரசு மீண்டும் கையில் எடுத்தது. திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, 999 ஆண்டு குத்தகை ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்பிறகு 1887-ம் ஆண்டு முல்லைப்பெரியாறு அணை கட்டும் பணி தொடங்கப்பட்டது.

பென்னிகுயிக் போராட்ட குணம்

இந்த அணை கட்டும் திட்டத்துக்கு இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக்கை ஆங்கிலேய அரசு நியமித்தது. பென்னிகுயிக்கின் விடா முயற்சி, தன்னம்பிக்கை, இயற்கையை எதிர்கொண்டு நடத்திய போராட்ட குணம் ஆகியவை இந்த அணை உருவாக முக்கிய காரணமாக அமைந்தது. இயற்கை பேரிடரால் அணை கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டதால், மேற்கொண்டு ஆங்கிலேய அரசு நிதி ஒதுக்க மறுத்தது. இதனால், பென்னிகுயிக் லண்டனில் இருந்த தனது சொத்துகளை விற்று இந்த அணையை கட்டினார் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அணை கட்டுமான பணிகள் முடிந்து 1895-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ந்தேதி அணையில் இருந்து முதல் முறையாக தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போதைய தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக இந்த அணை திகழ்கிறது. அணை கட்டப்பட்ட பின்னரே இந்த பகுதிகளில் விவசாயம் செழிக்கத் தொடங்கின. இதனால், 5 மாவட்ட மக்களும் பென்னிகுயிக்கை கடவுள் போல் வணங்கி வருகின்றனர்.

நீர்மட்டம் குறைப்பு

இந்த அணை நிரம்பினால் உபரிநீர் கேரள மாநிலம் வண்டிப்பெரியாறு, சப்பாத்து, வல்லக்கடவு, இடுக்கி வழியாக சென்று அரபிக்கடலில் கலந்தது. பின்னர் இடுக்கி அணை கட்டப்பட்டது. அதன்பிறகு, முல்லைப்பெரியாறு அணை பலவீனமாகி விட்டதாக கேரள அரசு தொடர்ந்து கூறி வந்தது. இதனால், அணையில் பலப்படுத்தும் பணிகள் மேற்கொள்வதற்காக கடந்த 1979-ம் ஆண்டு அணையின் நீர்மட்டம் 152 அடியில் இருந்து 136 அடியாக குறைக்கப்பட்டது.

தமிழக அரசு சார்பில் அணையை பலப்படுத்தும் பணிகள் மேற்கொண்டு பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டன. சுப்ரீம் கோர்ட்டு நியமித்த நிபுணர்கள் குழுவும் ஆய்வு செய்து அணை பலமாக இருப்பதை உறுதி செய்தது. ஆனாலும், அணையின் நீர்மட்டத்தை உயர்த்த கேரள அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்தது.

இதனால், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் சுமார் 36 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தரிசாக மாறின. 26 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இருபோக சாகுபடியில் இருந்து ஒருபோகமாக மாறியது. சுமார் 53 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் ஆற்றுப் பாசனத்தில் இருந்து ஆழ்குழாய் பாசனத்துக்கு மாறும் நிலை ஏற்பட்டது.

142 அடியாக உயர்வு

அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பான வழக்கில் தமிழக அரசு சட்டப்போராட்டங்கள் நடத்தியதன் பலனாக 2014-ம் ஆண்டு மே மாதம் 7-ந்தேதி வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு வழங்கியது. நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளவும், முல்லைப்பெரியாறு அணை பகுதியில் அமைந்துள்ள பேபி அணையை பலப்படுத்திவிட்டு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

இதையடுத்து அதே ஆண்டில் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட்டது. கோர்ட்டு தீர்ப்பளித்து 8 ஆண்டுகள் கடந்த போதிலும் பேபி அணையை பலப்படுத்தும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. அணை பகுதியில் உள்ள 15 மரங்களை அகற்றவும், அணைக்கு கட்டுமான பொருட்களை கொண்டு செல்வதற்கு வல்லக்கடவு சாலையை சீரமைக்கவும் கேரள அரசும், வனத்துறையும் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

கடந்த ஆண்டு இந்த மரங்களை வெட்டுவதற்கு கேரள அரசு அனுமதி அளித்தது. அதற்கு நன்றி தெரிவித்து கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பினார். ஆனால், உடனடியாக அந்த அனுமதி உத்தரவை கேரள அரசு ரத்து செய்து மீண்டும் சர்ச்சையை கிளப்பியது.

பேபி அணையை பலப்படுத்தும் பணிகள் முடங்கிக் கிடப்பதால் 152 அடி நீர்மட்டம் என்ற விவசாயிகளின் கனவும் கானல் நீராகவே உள்ளது. நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த தேவையான பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என்பது தொடர்பாக விவசாயிகள் கருத்து தெரிவித்தனர்.

அதன் விவரம் வருமாறு:-

பேபி அணை

பாலார்பட்டியை சேர்ந்த விவசாயி ஆண்டி:- பேபி அணை பகுதியில் உள்ள 15 மரங்களை வெட்டுவதற்கு கூட தமிழக அரசால் கடந்த 8 ஆண்டுகளில் அனுமதி பெற முடியவில்லை. ஆனால், தேனி மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பையும் மீறி லோயர்கேம்பில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த குடிநீர் திட்டத்தில் காட்டும் அக்கறையை பேபி அணையை பலப்படுத்தும் விவகாரத்தில் அரசு காட்டவில்லையோ என்று தோன்றுகிறது. புதிய அணை கட்டுவதில் கேரள அரசு காட்டும் அக்கறை அளவுக்கு கூட, பேபி அணையை பலப்படுத்தும் பணியின் மீது அரசு அக்கறை செலுத்துவதாக தெரியவில்லை. இது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஓய்வுபெற்ற வேளாண்மை அதிகாரியும், விவசாயியுமான ஜெயபாண்டியன்:- முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தினால் தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களும் வளம்பெறும். அதன் மூலம் வேளாண் உற்பத்தி பெருகும். தேனி மாவட்டத்தில் விளையும் காய்கறி, பழங்கள் அதிக அளவில் கேரள மாநிலத்துக்கு தான் கொண்டு செல்லப்படுகின்றன. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்து 8 ஆண்டுகள் கடந்தபோதிலும், பேபி அணையை பலப்படுத்தும் பணியை தொடங்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. பேபி அணையை பலப்படுத்த உள்ள தடைகளை சட்டரீதியாக தகர்த்து விரைவில் பலப்படுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும்.

சட்டரீதியாக மீட்க வேண்டும்

தேனியை சேர்ந்த வக்கீல் முத்துராமலிங்கம்:- முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக கேரளாவில் தொடர்ச்சியாக பல்வேறு வதந்திகள் பரப்பப்படுகிறது. அதை அந்த மாநில அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். முல்லைப்பெரியாறு அணையின் தமிழக உரிமைகளை அரசு பாதுகாக்க வேண்டும். இழந்த உரிமைகளை சட்டரீதியாக மீட்க வேண்டும். கோர்ட்டு உத்தரவிட்டபோதிலும் பேபி அணையை பலப்படுத்த தேவையான பணிகளை மேற்கொள்ள உரிய அனுமதியை கொடுக்காமல் கேரள அரசும், வனத்துறையும் இழுத்தடிப்பது இருமாநில நலனுக்கும் எதிராக உள்ளது. பேபி அணையை பலப்படுத்தும் பணியை தொடங்க மேலும் காலம் தாழ்த்தினால் 2011-ம் ஆண்டு எழுந்த மக்கள் போராட்டம் போன்று மீண்டும் போராடும் மனநிலைக்கு மக்கள் தள்ளப்படுவார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பேபி அணை பலப்படுத்தும் திட்டப் பணிகள் எந்த நிலையில் உள்ளது என்பது தொடர்பாக அணையின் செயற்பொறியாளர் சாம்இர்வின் கூறுகையில், "சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு அணைக்கு மின் இணைப்பு பெறப்பட்டுள்ளது. பேபி அணையை பலப்படுத்தும் பணியை மேற்கொள்ள அணை பகுதியில் வளர்ந்துள்ள சில மரங்களை அகற்ற வேண்டியது உள்ளது. இதற்கான அனுமதிக்காக காத்திருக்கிறோம். வல்லக்கடவு வனப்பகுதி வழியாக வரும் பாதையை சீரமைத்தால் தான் பேபி அணையை பலப்படுத்தும் பணிக்கான தளவாடப் பொருட்களை சிரமமின்றி கொண்டு வர முடியும்.

அணையின் வழக்கமான பராமரிப்பு பணிக்கு தளவாடப் பொருட்களை கொண்டு செல்வதற்கு வல்லக்கடவு பாதையில் உள்ள பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தோம். தற்போது அந்த பாலத்தை கேரள அரசு சார்பில் சீரமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது. அணை விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்து வருவதால் வல்லக்கடவு பாதை சீரமைப்பு, பேபி அணை பகுதியில் உள்ள மரங்களை வெட்டுவதற்கான அனுமதியை பெற கோர்ட்டு சரியான வழிகாட்டுதல் வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.


Next Story