குழந்தைகள் பாதுகாப்பு குறித்த புகார்களை பெற தனி இருக்கை அமைக்க ஏற்பாடு; அதிகாரி தகவல்
நெல்லை மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த புகார்களை பெற தனி இருக்கை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் தெரிவித்தார்.
நெல்லை மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த புகார்களை பெற தனி இருக்கை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் தெரிவித்தார்.
கூர்நோக்கு இல்லத்தில் ஆய்வு
நெல்லை புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் நேற்று ஆய்வு செய்தார். அங்குள்ள உணவுக்கூடம், சிறுவர்கள் தங்கும் அறை, சிறுவர்களுக்கான வகுப்பறை உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். மேலும் அங்குள்ள சிறுவர்களுடன் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-
செல்போன் செயலியில் பதிவு
நாடு முழுவதும் கூர்நோக்கு இல்லங்களில் சமீபகாலமாக உள்ள பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டு, தென்தமிழகத்தில் கூர்நோக்கு இல்லங்களை ஆணைய உறுப்பினர் என்ற அடிப்படையில் ஆய்வு செய்து வருகிறோம். கூர்நோக்கு இல்லங்களில் நேரில் சென்று ஆய்வு செய்யாமல், அங்குள்ள அனைத்து வசதிகளையும் ஆய்வு செய்யும் பொருட்டு, செல்போன் செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களும் முறையாக உள்ளதா? என்பது தொடர்பாக உண்மை தன்மை குறித்து கண்டறிய தென் தமிழகத்தில் 21 கூர்நோக்கு இல்லங்கள் தேர்வு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் சென்னை, கோவை, தஞ்சை, திருச்சி, நெல்லை மாவட்டங்களில் இருக்கும் குழந்தைகள் காப்பகங்கள் மற்றும் கூர்நோக்கு இல்லங்களில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
நெல்லையில் தனி இருக்கை
நெல்லை மாவட்டத்தில் இருக்கும் குழந்தைகள் காப்பகங்கள் மற்றும் கூர்நோக்கு இல்லங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது என்பது ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகும் குழந்தைகளிடம் புகார்களை பெறுவதற்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தால் இருக்கை உருவாக்கப்பட்டு, குழந்தைகளிடம் நேரடியாக புகார்கள் பெறப்பட்டு அதற்கான தீர்வுகள் காணப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக புதியதாக இருக்கை உருவாக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த இருக்கை உருவாகும் பட்சத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் நேரடியாக தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக புகார் அளித்து உடனுக்குடன் தீர்வு காணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிகாரிகள்
நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அருள்செல்வி, அரசினர் கூர்நோக்கு இல்ல சூப்பிரண்டு ஜெய்சங்கர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.