நாகர்கோவிலில்சாலைகளை சீரமைக்க ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு மேயர் மகேஷ் தகவல்
நாகர்கோவிலில் சாலை களை சீரமைக்க ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று மாநகராட்சி கூட்டத்தில் மேயர் மகேஷ் கூறினார்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் சாலை களை சீரமைக்க ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று மாநகராட்சி கூட்டத்தில் மேயர் மகேஷ் கூறினார்.
மாநகராட்சி அவசர கூட்டம்
நாகர்கோவில் மாநகராட்சி அவசரக் கூட்டம் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. மேயர் மகேஷ் தலைமை தாங்கினார். ஆணையர் ஆனந்த் மோகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மண்டல தலைவர்கள் முத்துராமன், செல்வக்குமார், அகஸ்டினா கோகிலவாணி, கவுன்சிலர்கள் மீனாதேவ், ஸ்ரீலிஜா, அக்சயா கண்ணன், நவீன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிவடைந்ததை தொடர்ந்து மேயர் மகேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நாகர்கோவில் மாநகராட்சி வார்டுக்கு உட்பட்ட பகுதியில் பகுதி சபா கூட்டம் நடத்தி பொது மக்களிடம் இருந்து குறைகள் கேட்கப்படுகிறது. அதன் அடிப்படையில் நாளை (அதாவது இன்று) 52 வார்டுகளிலும் அந்தந்த கவுன்சிலர்கள் தலைமையில் பகுதி சபா கூட்டம் நடக்கிறது.
அமைச்சர் கே.என்.நேரு வருகை
இந்த பகுதி சபா கூட்டமானது 3 மாதத்திற்கு ஒருமுறை வார்டு பகுதிகளில் நடத்தப்படுகிறது. மேலும், நாளை (செவ்வாய்க்கிழமை) மாநகர சபை கூட்டம் நடத்தப்படுகிறது. நாகர்கோவில் பெருவிளையில் காலை 9 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். இதைத் தொடர்ந்து வடசேரி பஸ் நிலையத்தில் ஆய்வு பணியை மேற்கொள்கிறார்.
பின்னர், நாகர்கோவில் மாநகராட்சி புதிய அலுவலக கட்டிடத்தை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். மாலையில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வு கூட்டத்திலும் அவர் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் கே.என்.நேரு நாளை(அதாவது இன்று) சென்னையில் இருந்து விமானம் மூலமாக தூத்துக்குடி வருகிறார். பின்னர், மாலை கன்னியாகுமரி வருகை தரும் அவருக்கு கன்னியாகுமரி கிழக்கு மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சாலை சீரமைக்க ரூ.30 கோடி
நாகர்கோவில் மாநகர பகுதியில் சாலைகள் குண்டும் குழியுமாக மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் அனைவரும் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்த நிலையில் சாலை சீரமைப்புக்கு ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியை கொண்டு மிகவும் பழுதான சாலைகள் முதல் கட்டமாக சீரமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.