சிறு-குறு விவசாயிகளை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் சிறப்பு சட்டம் இயற்றவேண்டும்;நம்பியூரில், விக்கிரமராஜா பேச்சு
சிறு-குறு விவசாயிகளை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் சிறப்பு சட்டம் இயற்றவேண்டும் என்று நம்பியூரில், விக்கிரமராஜா பேசினாா்.
நம்பியூர்
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் 40-வது வணிகர் தின மாநில மாநாடு ஈரோட்டில் மே 5-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை நடத்துவது குறித்து நம்பியூரில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
நாட்டில் உள்ள சிறு வணிகத்தை கார்பரேட் நிறுவனங்கள் சூறையாடிக் கொண்டிருக்கின்றன. சிறு, குறு வணிகத்தை பாதுகாத்தால்தான் நாட்டின் பொருளாதாரத்தை தாங்கி பிடிக்கும் வணிகர்களையும் காப்பாற்ற முடியும். இதுவரை தமிழகத்தில் 13 சதவீத வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. வருகிற 5 ஆண்டுகளில் 40 சதவீத சிறு கடைகள் காணாமல் போய்விடும்.
இதனால் வியாபாரிகள் மட்டுமே பாதிக்கப்படுவதில்லை. கட்டிட உரிமையாளர்கள், கடைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் என பலரும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே சிறு-குறு விவசாயிகளை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் வணிகர் சங்கத்தின் ஈரோடு மாவட்ட தலைவர் சண்முகவேல், செயலாளர் ராமசந்திரன், பொருளாளர் உதயம் செல்வம், நம்பியூர் வியாபாரிகள் சங்க தலைவர் லிங்கராஜ், செயலாளர் மனோகரன், மாவட்ட துணை தலைவர்கள் சேரன் சரவணன், வேலாசுந்தர்ராஜன், மாவட்ட இளைஞர் அணி லாரன்ஸ், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.