நன்செய் பாசன பயிர்களை காப்பாற்றகீழ்பவானி வாய்க்காலில் 10-ந் தேதி வரை தண்ணீர் திறக்க வேண்டும்விவசாயிகள் கோரிக்கை


நன்செய் பாசன பயிர்களை காப்பாற்றகீழ்பவானி வாய்க்காலில் 10-ந் தேதி வரை தண்ணீர் திறக்க வேண்டும்விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 3 Jan 2023 1:00 AM IST (Updated: 3 Jan 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் கோரிக்கை

ஈரோடு

நன்செய் பாசன பயிர்களை காப்பாற்ற கீழ்பவானி வாய்க்காலில் 10-ந் தேதி வரை தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தண்ணீர் திறப்பு

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டா் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டாா்.

தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திரராசு தலைமையில் விவசாயிகள் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறிஇருந்ததாவது:-

கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி நன்செய் பாசனத்துக்காக பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் இடை, இடையே தண்ணீர் நிறுத்தப்பட்டாலும், மழையால் பயிர்களை காப்பாற்ற முடிந்தது. தற்போது அறுவடைக்கு தயாராகவும், 70 சதவீதம் விளைந்த பருவத்திலும் நெல் பயிர்கள் உள்ளன. எனவே பாசனத்துக்கான தண்ணீரை வருகிற 10-ந் தேதி வரை வழங்க வேண்டும். தண்ணீர் வழங்கப்படவில்லை என்றால் பயிர்களும், மகசூலும் பாதிக்கும். புன்செய் பாசனத்துக்கு வருகிற 15-ந் தேதி தண்ணீர் திறக்க அரசு முன்அறிவிப்பு வெளியிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.

கடைகளுக்கு தடை

ஈரோடு மே5 அனைத்து வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், "மூங்கில்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட மீன் மற்றும் இறைச்சி கடைகள் செயல்பட்டன. இந்த கடைகளின் கழிவுகள் சாலையோரமாக கொட்டப்படுவதாக கூறி மீன் மற்றும் இறைச்சி கடைகளை நடத்த தடை விதித்து ஊராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. இதனால் கடைக்காரர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. ஊராட்சியின் சார்பில் இறைச்சி கழிவுகளை சேகரிக்க ஆட்கள் வருவதில்லை. மேலும், கழிவுகளை எங்கு சென்று கொட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படவில்லை. எனவே கழிவுகளை கொட்டுவதற்கு இடம் தேர்வு செய்து கொடுத்தால், அங்கேயே கொட்டிவிடுவோம். கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும்", என்று கூறி இருந்தனர்.

கொடுமுடி அருகே உள்ள கொளாநல்லி கருங்கரடு பகுதியை சேர்ந்த சிவராஜ் (வயது 46) என்பவர் தனது மனைவி, மகளுடன் வந்து கொடுத்த மனுவில், "நான் தனியார் நிறுவனத்தில் வேன் டிரைவராக பணியாற்றி வருகிறேன். சொந்த வீடு கட்டுவதற்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.1½ லட்சம் கடன் வாங்கி இருந்தேன். இதற்காக மாதந்தோறும் ரூ.4 ஆயிரத்து 437 வீதம் 14 மாதம் வட்டி பணம் கட்டி உள்ளேன். சில தவிர்க்க முடியாத காரணத்தால் கடந்த டிசம்பர் மாதம் தவணை தொகையை கட்ட முடியவில்லை. அதற்கு தனியார் நிதி நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள் செல்போனில் தொடர்பு கொண்டு தகாத வார்த்தையில் பேசி திட்டுகிறார்கள். மேலும், வீட்டுக்கு வந்து தொந்தரவு செய்கிறார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்", என்று கூறிஇருந்தார்.

184 மனுக்கள்

இந்த கூட்டத்தில் மொத்தம் 184 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இதில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 பேருக்கு தலா ரூ.600 வீதம் 4 ஊன்று கோல்கள், ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.9 ஆயிரத்து 600 மதிப்பிலான 3 சக்கர சைக்கிள் ஆகியவற்றை மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா வழங்கினார். இதில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் குமரன், ஆதிதிராவிடர் நல அதிகாரி மீனாட்சி, மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி கோதைசெல்வி உள்பட பலா் கலந்துகொண்டனர்.


Next Story