சின்னமனூரில் காய்கறி மொத்த வணிக வளாகம் அமைக்கரூ.37 கோடிக்கு உத்தேச திட்ட மதிப்பீடு:கலந்துரையாடல் கூட்டத்தில் இணை இயக்குனர் தகவல்


சின்னமனூரில் காய்கறி மொத்த வணிக வளாகம் அமைக்கரூ.37 கோடிக்கு உத்தேச திட்ட மதிப்பீடு:கலந்துரையாடல் கூட்டத்தில் இணை இயக்குனர் தகவல்
x
தினத்தந்தி 11 Aug 2023 12:15 AM IST (Updated: 11 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சின்னமனூரில் காய்கறி மொத்த வணிக வளாகம் அமைக்க ரூ.37 கோடிக்கு உத்தேச திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளதாக கலந்துரையாடல் கூட்டத்தில் இணை இயக்குனர் தெரிவித்தார்.

தேனி

கலந்துரையாடல் கூட்டம்

சின்னமனூரில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில், மொத்த காய்கறிகள் வணிக வளாகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட அளவில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கினார். கம்பம் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன், ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இணை இயக்குனர் முரளிதரன் கலந்துகொண்டு பேசும்போது, 'தமிழக அரசு தேனி, கோவை, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் மொத்த காய்கறிகள் வணிக வளாகம் அமைக்கப்படும் என்று அறிவித்தது. தேனி மாவட்டத்தில் சின்னமனூர் பகுதியில் இது அமைகிறது. இதற்காக ரூ.37 கோடி செலவாகும் என்ற உத்தேச திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. இறுதியான திட்டமதிப்பீடு தயார் செய்து அரசு ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அரசு ஒப்புதல் கிடைத்தவுடன் பணிகள் தொடங்கும். இதில், சாலை, கழிப்பிடம், குடிநீர் வசதி, கேண்டீன் வசதி போன்ற அடிப்படை வசதிகள் அரசு சார்பிலும், கடைகள் கட்டுவது போன்ற இதர பணிகள் மக்கள் பங்களிப்புடனும் ஏற்படுத்தப்படும். இதில் 84 கடைகள் அமைக்கப்படும்' என்றார்.

நீண்டகால பயன்

கூட்டத்தில் கலெக்டர் ஷஜீவனா பேசும்போது, 'அனைத்து கட்டமைப்புகளுடனும் இந்த வணிக வளாகம் அமைக்கப்பட உள்ளது. தொலைநோக்கு பார்வையுடன் இதை அமைக்க வேண்டும். நவீன வசதிகளுடன் நீண்டகாலம் பயன் அளிக்கும் திட்டமாக செயல்படுத்த வேண்டும். அதற்கு முதற்கட்டமாக ஒரு குழு உருவாக்கப்படும். அந்த குழுவின் மூலம் விவாதித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். குழுவில் இணைய விருப்பம் உள்ள வியாபாரிகள், விவசாயிகள் தங்களின் விவரங்களை தெரிவிக்கலாம்' என்றார்.

சூரியமின் சக்தி

மேலும் இக்கூட்டத்தில் விவசாயிகள், வியாபாரிகள் பேசும்போது, 'கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் சுமார் 14 ஆயிரம் ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. அவற்றை 10 நாட்களாவது இருப்பு வைத்து ஏற்றுமதி செய்யும் வகையில் குளிர்பதன வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.

வாழையில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். கட்டப்படும் ஒவ்வொரு கடைக்கும் சூரிய மின்சக்தி உற்பத்திக்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும். காய்கறி கழிவுகளை உரமாக்க வேண்டும். விவசாயிகள் மற்றும் விவசாய உற்பத்தியாளர் குழுவினருக்கு அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும்' என்றனர்.


Related Tags :
Next Story