விவசாயிகளுக்கு வழங்குவதற்காக18 ஆயிரத்து 276 டன் உரம் இருப்பு
விவசாயிகளுக்கு வழங்குவதற்காக 18 ஆயிரத்து 276 டன் உரம் இருப்பு வைக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
விவசாயிகளுக்கு வழங்குவதற்காக 18 ஆயிரத்து 276 டன் உரம் இருப்பு வைக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
விதை -உரம் இருப்பு
ஈரோடு மாவட்டத்தின் இயல்பான ஆண்டு சராசரி மழையளவு 733.44 மில்லி மீட்டர் ஆகும். நடப்பு ஆண்டில் இதுவரை 50.32 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தற்போது 82.15 அடியாகவும், 16.85 டி.எம்.சி நீர் இருப்பும் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் மார்ச் மாதம் முடிய 1 லட்சத்து 1,604 ஏக்கர் பரப்பில் வேளாண் பயிர்களும், 38 ஆயிரத்து 582 ஏக்கர் பரப்பில் தோட்டக்கலை பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
நடப்பாண்டில் வேளாண்மை விரிவாக்க மையங்களில் வினியோகம் செய்வதற்காக நெல் விதைகள் 89 டன்னும், சிறுதானியங்கள் 2 டன்னும், பயறு வகைகள் 13 டன்னும், எண்ணெய் வித்துக்கள் 8 டன்னும் என மொத்தம் 112 டன் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. ரசாயன உரங்களான யூரியா 5 ஆயிரத்து 130 டன்னும், டி.ஏ.பி 2 ஆயிரத்து 618 டன்னும், பொட்டாஷ் 582 டன்னும், காம்ப்ளக்ஸ் 9 ஆயிரத்து 937 டன்னும் என மொத்தம் 18 ஆயிரத்து 276 டன் உரம் இருப்பில் உள்ளது. நடப்பு பருவத்திற்கு தேவையான இடுபொருட்கள் போதுமான அளவு இருப்பில் உள்ளன.
நிலத்தடிநீர் ஆய்வு
2022- 2023-ம் ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டமானது தேர்வு செய்யப்பட்ட 44 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டது. இந்த ஊராட்சிகளில் உள்ள தரிசு நிலங்கள் கண்டறியப்பட்டு அவற்றை சாகுபடிக்கு கொண்டு வந்து உணவுதானிய உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வேளாண்மைத்துறையின் மூலம் தரிசு நிலத்தொகுப்புகள் கண்டறியப்பட்டு அங்கு ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்படுகிறது. இதையொட்டி நிலத்தடிநீர் ஆய்வு செய்யப்பட்டு ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
ரசாயன உரம்
தடப்பள்ளி அரக்கன்கோட்டை ஆயக்கட்டு பாசன பகுதிகளில் நடப்பு பருவத்தில் நெல் சாகுபடிக்காக பாசனநீர் திறக்கப்பட்டுள்ளது. கோபிசெட்டிபாளையம் மற்றும் டி.என்.பாளையம் வட்டாரங்களுக்கு உள்பட்ட வட்டார மற்றும் துணை வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் விவசாயிகளுக்கு தேவையான விதைநெல், உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்டங்கள், இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும், விவசாயிகளுக்கு தேவையான ரசாயன உரங்கள் கூட்டுறவு மற்றும் தனியார் விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் இவற்றை பெற்று பயன்பெறலாம் என்று ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.