நல்லாட்சிக்கு ஆதரவு தரும் வகையில்பெரிய வெற்றியை தர வாக்காளர்கள் காத்திருக்கிறார்கள்;அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்


நல்லாட்சிக்கு ஆதரவு தரும் வகையில்பெரிய வெற்றியை தர வாக்காளர்கள் காத்திருக்கிறார்கள்;அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்
x

நல்லாட்சிக்கு ஆதரவு தரும் வகையில் பெரிய வெற்றியை தர வாக்காளர்கள் காத்திருக்கிறார்கள் என்று ஈரோட்டில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

ஈரோடு

நல்லாட்சிக்கு ஆதரவு தரும் வகையில் பெரிய வெற்றியை தர வாக்காளர்கள் காத்திருக்கிறார்கள் என்று ஈரோட்டில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

பெரிய வெற்றி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி தி.மு.க. நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் ஈரோடு திருநகர்காலனியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தி.மு.க. மாவட்ட பொருளாளர் பி.கே.பழனிசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு பேசினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியான காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி பிரகாசமாக இருக்கிறது. முதல்-அமைச்சரின் கடந்த 22 மாதகால ஆட்சியில் பலன் பெறாத மக்களே இல்லை. நல்லாட்சிக்கு நல் ஆதரவை தரும் வகையில் வாக்காளர்கள் அதற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் பெரிய வெற்றியை தர காத்திருக்கிறார்கள்.

இந்த தொகுதியில் தேர்தல் பணியாற்ற சென்னை தெற்கு மாவட்ட பகுதிக்கு உள்பட்ட கட்சியினர் களப்பணியாற்ற வந்திருக்கிறார்கள். நாங்கள் வீடு, வீடாக சென்று வாக்காளர்களை தனித்தனியே சந்தித்து அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி வாக்குகள் சேகாிக்க உள்ளோம்.

காலிப்பணியிடம்

கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் எந்த விதிமுறையும் கடைபிடிக்காமல் ஏதாவது ஒரு வகையில் பலர் பணியில் சேர்ந்து உள்ளனர். அவர்கள் பாதிக்கக்கூடாது என்று முதல்-அமைச்சர் பணி உத்தரவாதத்தை கொடுத்து இருக்கிறார். 3 ஆயிரத்து 949 செவிலியர் காலிப்பணியிடங்களை அந்தந்த மாவட்ட கலெக்டர் தலைமையில் நிரப்பும் பணி நடக்கிறது.

மருத்துவத்துறையில் 4 ஆயிரத்து 308 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. கடந்த 10 நாட்களுக்கு முன்பு கூட 112 சித்த டாக்டர்கள், 5 ஆயுர்வேத டாக்டர்கள், 13 ஹோமியோபதி டாக்டர்கள் என மொத்தம் 130 டாக்டர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டு உள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் 800-க்கும் மேற்பட்ட பணி ஆணை வழங்கப்பட உள்ளது.

தற்கொலை எண்ணிக்கை

தற்கொலையை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதையொட்டி சாணி பவுடர், பூச்சி கொல்லி மருந்து, எலி மருந்துகளை கண்ணுக்கு தெரியும் வகையில் வைத்து விற்பனை செய்யக்கூடாது என்றும், தனியாக வந்து கேட்டால் கொடுக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சாணி பவுடரை தடை விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த 7 மாதங்களாக தற்கொலை எண்ணிக்கை குறைந்து இருக்கிறது.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

இந்த கூட்டத்தில் இளைஞர் அணி அமைப்பாளர் திருவாசகம், பகுதி செயலாளர் வி.சி.நடராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story