கவுன்சிலரை தாக்கிய வாலிபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிகோத்தகிரி போலீஸ் நிலையம் முன்பு பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
கோத்தகிரி அருகே கவுன்சிலரை தாக்கி விட்டு, தப்பியோடிய வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் போலீஸ் நிலையம் முன் திரண்டு, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
கோத்தகிரி
கோத்தகிரி அருகே கவுன்சிலரை தாக்கி விட்டு, தப்பியோடிய வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் போலீஸ் நிலையம் முன் திரண்டு, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
வாக்குவாதம்
கோத்தகிரி அருகே உள்ள எம்.கைகாட்டி பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என்பவரது மகன் மனோகரன் (வயது 43). இவர் நடுஹட்டி ஊராட்சி கவுன்சிலராக இருந்து வருகிறார். இந்தநிலையில் இவர் தனது கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரிடமும், கோடை காலத்தில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என தொடர்ந்து அறிவுரை கூறி வந்துள்ளார்.
இது சம்பந்தமாக அதே பகுதியை சேர்ந்த ராஜசேகர் என்பவரது மகன் கவுதம் (21) மற்றும் மனோகரனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. கடந்த 16-ந்தேதி விடுமறையில் பாண்டியன் நகருக்கு வந்த கவுதம் மற்றும் மனோகரனுக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தாக்குதல்
வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த கவுதம் அருகில் கிடந்த இரும்புக் கம்பியால் மனோகரனைத் தாக்கி விட்டு தப்பியோடியுள்ளதாக கூறப்படுகிறது. கவுதம் தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்த மனோகரனை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகி்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அவர் உள்நோயாளியாக சிகிச்சைப் பெற்று வருகிறார். இது குறித்து கோத்தகிரி போலீசார் நேற்று முன் தினம் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
காத்திருப்பு போராட்டம்
இந்தநிலையில் சம்பவம் நடந்து 3 நாட்களாகியும், கவுன்சிலரைத் தாக்கி விட்டு தப்பிச் சென்ற வாலிபர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதைக் கண்டித்தும், உடனடியாக அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாண்டியன் நகர் கிராம மக்கள் நேற்று காலை 10 மணிக்கு கோத்தகிரி போலீஸ் நிலையம் முன் திரண்டனர். மேலும் அவர்கள் போலீசார் சம்பந்தபட்ட வாலிபர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை இங்கிருந்து செல்ல மாட்டோம் எனக் கூறி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கவுன்சிலரைத் தாக்கி காயப்படுத்திய கவுதம் மீது நேற்று மாலை போலீசார் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சுமார் 6 மணி நேரத்திற்கும் மேல் பரபரப்பு நிலவியது.