துக்கத்தில் இறந்த தொழிலாளியின் உடலுக்கு தெருவில் இறுதிச்சடங்கு நடத்திய குடும்பத்தினர்


துக்கத்தில் இறந்த தொழிலாளியின் உடலுக்கு  தெருவில் இறுதிச்சடங்கு நடத்திய குடும்பத்தினர்
x
தினத்தந்தி 9 Oct 2022 12:15 AM IST (Updated: 9 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் அருகே வீட்டு அடமான கடனுக்கு தவணை செலுத்தாததால், தொழிலாளியின் வீட்டுக்கு தனியார் நிதி நிறுவனத்தினர் ‘சீல்’ வைத்தனர். இதனால் துக்கத்தில் இறந்த தொழிலாளியின் உடலுக்கு தெருவில் வைத்து குடும்பத்தினர் இறுதிச்சடங்கு நடத்தியது சோகத்தை ஏற்படுத்தியது.

தென்காசி

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே வீட்டு அடமான கடனுக்கு தவணை செலுத்தாததால், தொழிலாளியின் வீட்டுக்கு தனியார் நிதி நிறுவனத்தினர் 'சீல்' வைத்தனர். இதனால் துக்கத்தில் இறந்த தொழிலாளியின் உடலுக்கு தெருவில் வைத்து குடும்பத்தினர் இறுதிச்சடங்கு நடத்தியது சோகத்தை ஏற்படுத்தியது.

தொழிலாளி வீட்டுக்கு 'சீல்' வைப்பு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கீழக்கலங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 52). கூலி தொழிலாளி. இவருக்கு பார்வதி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

முருகன், தென்காசியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.2½ லட்சம் வீட்டு அடமான கடன் பெற்று இருந்தார். பின்னர் கொரோனா ஊரடங்கில் சில மாதங்கள் தவணைகள் செலுத்தாததாக கூறிய தனியார் நிதி நிறுவனத்தினர், கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகனின் வீட்டில் உள்ளவர்களை வெளியேற்றி விட்டு, வீட்டுக்கு 'சீல்' வைத்தனர்.

தெருவில் இறுதிச்சடங்கு

இதனால் முருகனின் குடும்பத்தினர், உறவினரது வீட்டில் தங்கியிருந்தனர். அங்குள்ள பஸ் நிறுத்த கட்டிடத்தில் முருகன் தங்கியிருந்தார். இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் திடீரென்று மயங்கி விழுந்தார். உடனே அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக இறந்தார்.

இறந்த முருகனின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது வீடு 'சீல்' வைக்கப்பட்டு இருந்ததால், தெருவில் வைத்து குடும்பத்தினர் இறுதிச்சடங்கு நடத்தினர். இது காண்போரை கண்கலங்கச் செய்தது.

தனியார் நிதி நிறுவனம் மீது புகார்

இதற்கிடையே, தனது கணவரின் சாவுக்கு காரணமான தனியார் நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு பார்வதி, ஊத்துமலை போலீஸ் நிலையத்தில் புகார் மனு வழங்கினார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆலங்குளம் அருகே வீட்டு அடமான கடனுக்கு தவணை செலுத்தாததாக கூறி வீட்டுக்கு 'சீல்' வைத்ததால், துக்கத்தில் இறந்த தொழிலாளியின் உடலுக்கு தெருவில் குடும்பத்தினர் இறுதிச்சடங்கு நடத்திய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story