முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்குயாசகம் பெற்ற ரூ.10 ஆயிரத்தை வழங்கிய முதியவர்இதுவரை ரூ.55 லட்சம் கொடுத்து உள்ளார்
முதல்-அமைச்சரின் நிவாரண நிதி
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள ஆலங்கிணறு பகுதியை சேர்ந்தவர் பூல்பாண்டியன் (வயது 73). இவருடைய மனைவி இறந்துவிட்டார். பூல்பாண்டியன் பல்வேறு இடங்களுக்கு சென்று யாசகம் பெற்று வாழ்ந்து வருகிறார். மேலும் சில இடங்களில் முடிந்த வேலையை செய்து சம்பாதிக்கிறார். இதில் தனக்கு தேவையான பணத்தை எடுத்து கொண்டு மீதமுள்ள பணத்தை சமூக சேவைக்காக கொடுத்து வருகிறார். கொரோனா பாதிப்புக்கு பிறகு அவருக்கு கிடைக்கும் பணத்தை ஒவ்வொரு மாவட்டமாக சென்று கலெக்டர் மூலமாக முதல்-அமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரம் வீதம் வழங்கி வருகிறார். அவர் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று காலை ரூ.10 ஆயிரத்துடன் வந்தார். பிறகு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரத்தை அனுப்பி விட்டு அதன் ரசீதை கலெக்டர் அலுவலகத்தில் அவர் ஒப்படைத்தார்.
இதுகுறித்து பூல் பாண்டியன் கூறும்போது, "நான் யாசகம் பெற்ற தொகையில் எனக்கு தேவையான செலவுக்கு மட்டும் எடுத்து கொண்டு, மீதமுள்ள பணத்தை சமூக சேவைக்காக வழங்கி வருகிறேன்.
கொரோனா நிவாரண நிதியாக இதுவரை 35 மாவட்ட கலெக்டரிடம் பணம் வழங்கி இருக்கிறேன். 36-வதாக ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணம் செலுத்தி உள்ளேன். முதல்-அமைச்சரின் நிவாரண நிதி, அரசு பள்ளிக்கூடங்களின் மேம்பாட்டுக்கும் யாசகம் பெறும் தொகையை வழங்குகிறேன். இதுவரை ரூ.55 லட்சம் நிவாரணமாக வழங்கி உள்ளேன்", என்றார்.