ஏற்றுமதி நிறுவன உரிமையாளரிடம்ஆன்லைன் மூலம் ரூ.37 லட்சம் மோசடி; நைஜீரியா நாட்டுக்காரர் கைது


ஏற்றுமதி நிறுவன உரிமையாளரிடம்ஆன்லைன் மூலம் ரூ.37 லட்சம் மோசடி; நைஜீரியா நாட்டுக்காரர் கைது
x
தினத்தந்தி 2 Jan 2023 12:15 AM IST (Updated: 2 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில், ஏற்றுமதி நிறுவன உரிமையாளரிடம் ஆன்லைன் மூலம் ரூ.37 லட்சம் மோசடி செய்த நைஜீரியா நாட்டுக்காரரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில், ஏற்றுமதி நிறுவன உரிமையாளரிடம் ஆன்லைன் மூலம் ரூ.37 லட்சம் மோசடி செய்த நைஜீரியா நாட்டுக்காரரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

வாட்ஸ்-அப் தகவல்

தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் செலஸ்டின். இவருடைய மகன் பனிமய கிளாட்வின் மனோஜ் (வயது 38). இவர் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனம் நடத்தி வருகிறார்.

இவருடைய வாட்ஸ்-அப்புக்கு ஒரு தகவல் வந்தது. அந்த தகவலில் தோகா நாட்டில் உள்ள ஒரு தனியார் கால்நடை பாதுகாப்பு நிறுவனத்துக்கு, இந்தியாவில் மராட்டியம் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் உள்ள 2 தனியார் நிறுவனங்களில் இருந்து கால்நடைக்கு தேவையான மருந்துகளை வாங்கி அனுப்பக் கோரி `லிங்கு'டன் கூடிய ஒரு தகவல் வந்துள்ளது.

மருந்து அனுப்பினர்

பனிமய கிளாட்வின் மனோஜ், அந்த லிங்கை திறந்தார். இதனை தொடர்ந்து தோகாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து பேசுவது போன்று சிலர் பேசி உள்ளனர்.

இதனை நம்பிய பனிமய கிளாட்வின் மனோஜ், மராட்டியம், சிக்கிம் மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனங்களை தொடர்பு கொண்டு உள்ளார். அதன்பேரில் அந்த நிறுவனத்தில் இருந்து சிறிது மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிகிறது.

ரூ.37 லட்சம்

இதனை தொடர்ந்து அதிக அளவில் கொள்முதல் செய்வதற்கு அவ்வப்போது சில சான்றிதழ் (கிளியரன்ஸ்) பெற வேண்டும் என்று கூறி மராட்டியம், சிக்கிம் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பேசி பணம் கேட்டு உள்ளனர்.

அதன்பேரில் பனிமய கிளாட்வின் மனோஜ் பல்வேறு கட்டங்களாக மொத்தம் ரூ.36 லட்சத்து 98 ஆயிரத்து 800-ஐ அனுப்பி உள்ளார். அதன்பிறகு பணம் பெற்ற நிறுவனங்கள் மருந்தை அனுப்பி வைக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பனிமய கிளாட்வின் மனோஜ் அந்த நிறுவனங்களை தொடர்பு கொண்டும் எந்தவித பலனும் இல்லை.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சைபர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் வழக்குப்பதிவு செய்தார்.

மோசடி எப்படி?

தொடர்ந்து நடத்திய விசாரணையில், நைஜீரியா நாட்டை சேர்ந்த ஈசி பிடலிஸ் நுபூசி (வயது 42) என்பவர் மும்பையில் தங்கி இருந்து மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இவர் போலியாக வாட்ஸ்-அப், மின்னஞ்சல் முகவரிகளை உருவாக்கி, அதன்மூலம் போலி விளம்பரங்களை தயாரித்து ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனம் நடத்தி வருபவர்களை கண்டறிந்து அனுப்பி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அவரது கூட்டாளிகள் மூலம் பல்வேறு இடங்களில் இருந்து தொடர்பு கொண்டு பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டு இருப்பதும் தெரியவந்தது.

கைது

இதனை தொடர்ந்து தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தலைமையிலான போலீசார் மும்பைக்கு சென்றனர். அங்கு நவிமும்பை உல்வே நோடு பகுதியில் ஒரு வீட்டில் தங்கி இருந்த ஈசி பிடலிஸ் நுபூசியை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

அவரிடம் இருந்து ஒரு லேப்-டாப், 3 செல்போன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

சிறையில் அடைப்பு

தொடர்ந்து ஈசி பிடலிஸ் நுபூசியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், இதேபோன்று பலரிடம் பணம் மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இந்த மோசடி வழக்கில் மேலும் பலர் ஈடுபட்டு இருப்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

இதனை தொடர்ந்து ஈசி பிடலிஸ் நுபூசியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story