உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்


உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு  ரூ.4 லட்சம் நிவாரணம்
x
தினத்தந்தி 16 Dec 2022 12:15 AM IST (Updated: 16 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மசினகுடி அருகே ஆற்று வெள்ளத்தில் சிக்கி பலியான 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதியை சுற்றுலாத்துறை அமைச்சர், நீலகிரி எம்.பி. வழங்கினர்.

நீலகிரி

ஊட்டி,

மசினகுடி அருகே ஆற்று வெள்ளத்தில் சிக்கி பலியான 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதியை சுற்றுலாத்துறை அமைச்சர், நீலகிரி எம்.பி. வழங்கினர்.

நிவாரண நிதி

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் சீகூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆனைக்கட்டி அருகே ஆணிக்கல் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 12-ந் தேதி இந்த கோவிலுக்கு சென்று திரும்பிய ஜக்கலோரையை சேர்ந்த உறவினர்களான சரோஜா (வயது 65), வாசுகி (45), விமலா (35), சுசீலா (56) ஆகிய 4 பெண்கள் தரைப்பாலத்தை கடக்க முயன்ற போது ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இதில் 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தநிலையில் நேற்று சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், ஆ.ராசா எம்.பி., நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆகியோர் ஜக்கலோரை கிராமத்திற்கு நேரில் சென்று உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர். தொடர்ந்து பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கினர். மேலும் தி.மு.க. சார்பில் தலா ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது.

அரசு வேலை

பின்னர் அமைச்சர் ராமச்சந்திரன் கூறும்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டது. எனக்கு சுற்றுலாத்துறை ஒதுக்கப்பட்டு உள்ளதால், சுற்றுலா தலமான நீலகிரியை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

ஆ.ராசா எம்.பி. கூறுகையில், உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முதல் கட்டமாக நிவாரண நிதி வழங்கப்பட்டு உள்ளது. இதையடுத்து குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றார். அப்போது அரசு முன்னாள் கொறடா பா.மு.முபாரக், ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் (எ) மாதன், நகர்மன்ற துணைத்தலைவர் ரவிக்குமார், ஊட்டி ஆர்.டி.ஓ. துரைசாமி, தாசில்தார் ராஜசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயா, நந்தகுமார் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர். குன்னூரில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சரும், எம்.பி.யும். நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து மழையால் பாதிக்கப்பட்ட குன்னூர் மற்றும் கோத்தகிரியை சேர்ந்த 48 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் தலா ரூ.10 ஆயிரம் நிவாரண தொகை வழங்கப்பட்டது.


Next Story