தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் குடும்பத்துக்கு கூடுதலாக ரூ.5 லட்சம் நிதி; கனிமொழி எம்.பி. வழங்கினார்


தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் குடும்பத்துக்கு  கூடுதலாக ரூ.5 லட்சம் நிதி; கனிமொழி எம்.பி. வழங்கினார்
x
தினத்தந்தி 11 Dec 2022 12:15 AM IST (Updated: 11 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பத்துக்கு கூடுதலாக ரூ.5 லட்சம் நிவாரண நிதியை கனிமொழி எம்.பி. வழங்கினார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பத்துக்கு கூடுதலாக ரூ.5 லட்சம் நிவாரண நிதியை கனிமொழி எம்.பி. வழங்கினார்.

துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலி

தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானர்கள். அந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு அரசு மூலம் ஏற்கனவே தலா ரூ.20 லட்சம் வழங்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் பரிந்துரையின் பேரில், 13 குடும்பத்துக்கும் கூடுதலாக தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்து இருந்தார்.

கூடுதலாக ரூ.5 லட்சம்

அதன்படி, துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு கூடுதலாக ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு, துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேர் குடும்பங்களுக்கு கூடுதலாக ரூ.5 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலைகளை வழங்கினார். இதில் மாநகராட்சி மேயர் என்.பி.ஜெகன், சண்முகையா எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story