மருத்துவமனை பெண் ஊழியரிடம் 5 பவுன் நகை பறிப்பு
களியக்காவிளையில் மருத்துவமனை பெண் ஊழியரிடம் 5 பவுன் நகை பறிப்பு
களியக்காவிளை,
களியக்காவிளையில் மருத்துவமனை பெண் ஊழியரிடம் இருந்து 5 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை ேபாலீசார் தேடி வருகிறார்கள்.
மருத்துவமனை ஊழியர்
களியக்காவிளை அருகே உள்ள குளப்புறம், கூட்டப்புளியைச் சேர்ந்தவர் ஷைனி (வயது42). இவர் களியக்காவிளை கோழிவிளையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவர் தினமும் மதியம் வீட்டுக்கு ெசன்று சாப்பிடுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் மதியம் வீட்டுக்கு செல்வதற்காக கோழிவிளையில் இருந்து கூட்டப்புளி செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரது பின்னால் ஸ்கூட்டரில் 2 மர்ம நபர்கள் வந்தனர்.
நகை பறிப்பு
அவர்கள் ஷைனியின் அருகே வந்ததும் பின்னால் இருந்த நபர் அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஷைனி, 'திருடன்... திருடன்...' என சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் விரைந்து வந்தனர். அதற்குள் மர்ம நபர்கள் ஸ்கூட்டரில் வேகமாக தப்பி ெசன்றனர்.
இதுகுறித்து ஷைனி களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். இதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி மர்ம நபர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மருத்துவமனை பெண் ஊழியரிடம் 5 பவுன் நகை பறிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.