தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.10 லட்சம் வழிப்பறி
குலசேகரன்பட்டினத்தில் தனியார் இரும்பு விற்பனை நிறுவன மேலாளரிடம் ரூ.10 லட்சத்தை துணிகரமாக வழிப்பறி செய்த இரண்டு மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினத்தில் தனியார் இரும்பு விற்பனை நிறுவன மேலாளரிடம் ரூ.10 லட்சத்தை துணிகரமாக வழிப்பறி செய்த இரண்டு மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
தனியார் நிறுவன மேலாளர்
வடக்கு ஆத்தூர் முத்தாரம்மன் கோவிலைதெருவை சேர்ந்த சோமசுந்தரம் மகன் செந்தில்குமார் (வயது 40). இவர், தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியில் உள்ள ஒரு தனியார் இரும்பு விற்பனை நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிறுவனத்தில் இருந்து பழைய இரும்புகளை சென்னையிலுள்ள இரும்பு உருக்காலை களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைப்பது வழக்கம். இதேபோன்று உடன்குடியைச் சேர்ந்த மனோகரன் என்பவருக்கு சொந்தமான உருக்காலைக்கு இரும்பு அனுப்பியதற்காக பணம் வாங்குவதற்கு நிறுவனத்துக்கு சொந்தமான லோடு ஆட்டோவில் அவர் வந்துள்ளார். நேற்று முன்தினம் உடன்குடியில் அந்த உருக்காலைக்கு சொந்தமான கடைக்கு சென்று ரூ.10 லட்சம் பணம் வாங்கியுள்ளார்.
ரூ.10 லட்சம் வழிப்பறி
அங்கிருந்து ரூ.10 லட்சத்துடன் தூத்துக்குடியிலுள்ள நிறுவனத்துக்கு மீண்டும் லோடு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். டிரைவர் சின்னத்துரை என்பவர் ஆட்டோவை ஓட்டி சென்றுள்ளார். உடன்குடியிலிருந்து குலசேகரன்பட்டினம் செல்லும் சாலையில் தருவைகுளம் இசக்கியம்மன்கோவில் அருகே சென்றபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், செந்தில்குமாரிடம் வந்து லோடு ஆட்டோவை ஒழுங்காக ஓட்டிச் செல்லுமாறு கூறி பிரச்சினை செய்து உள்ளனர். வாய்த்தகராறு முற்றியதில் லோடு ஆட்டோவை மறித்து மோட்டார் சைக்கிளை நிறுத்தி தகராறு செய்தனராம்.
இதனால் செந்தில்குமாரும், சின்னத்துரையும் லோடு ஆட்டோவில் இருந்து இறங்கி உள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் செந்தில்குமார், சின்னத்திரையை கீழே தள்ளிவிட்டு லோடு ஆட்டோவில் வைத்திருந்த ரூ.10 லட்சம் பணத்தை பறித்து கொண்டு, தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் ஏறி சென்றுள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இருவரும் கூச்சல் போட்டுள்ளனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவருவதற்குள் அந்த 2 பேரும் மோட்டார் சைக்கிளில் பணத்துடன் தப்பி சென்று விட்டனராம்.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
இதுகுறித்து செந்தில்குமார் அளித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் இன்ஸ்பெக்டர் ரகுராஜன், சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் ஆகியோர் வழக்கு பதிவு ரூ.10 லட்சம் பணத்தை பறித்து சென்ற 2 மர்மநபர்களை தேடி வருகின்றனர்.