டாஸ்மாக் கடையில் ஊழியர்களிடம் ரூ.1½ லட்சம் பறிப்பு
எட்டயபுரம் அருகே டாஸ்மாக் கடையில் ஊழியர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1½ லட்சத்தை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
எட்டயபுரம்:
எட்டயபுரம் அருகே டாஸ்மாக் கடையில் ஊழியர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1½ லட்சத்தை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
டாஸ்மாக் ஊழியர்கள்
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள பூசனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யப்பசாமி (வயது 42). இவர் எட்டயபுரம் அருகே முத்தலாபுரம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக உள்ளார். இதே டாஸ்மாக்கில் விற்பனையாளராக தூத்துக்குடி அருகே உள்ள காட்டுநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி (44) என்பவர் உள்ளார்.
நேற்று முன்தினம் இரவில் 2 பேரும் கணக்குகளை சரிபார்த்தனர். பின்னர் கடையில் வசூலான பணத்தை எடுத்துக் கொண்டு கடையை பூட்டுவதற்கு தயாரானார்கள்.
ரூ.1½ லட்சம் பறிப்பு
அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் மதுவாங்க வந்தனர். திடீரென்று 2 பேரும் அய்யப்பசாமி, கருப்பசாமி ஆகியோரை கத்தியை காட்டி மிரட்டி அவர்கள் வைத்து இருந்த ரூ.1½ லட்சத்தை பறித்தனர்.
மேலும் 2 பேரின் செல்போன்களையும், கடையில் இருந்த 40 மதுபாட்டில்களையும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து எட்டயபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.
பரபரப்பு
எட்டயபுரம் அருகே டாஸ்மாக் கடையில் ஊழியர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1½ லட்சத்தை மர்மநபர்கள் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.