உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழாவுக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது - 23-ந்தேதி கொடியேற்றம்


உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழாவுக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது - 23-ந்தேதி கொடியேற்றம்
x

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழாவுக்கு பந்தல் முகூர்த்தக்கால் நேற்று நடப்பட்டது. 23-ந் தேதி கொடியேற்றம் நடக்கிறது.

மதுரை


உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழாவுக்கு பந்தல் முகூர்த்தக்கால் நேற்று நடப்பட்டது. 23-ந் தேதி கொடியேற்றம் நடக்கிறது.

முகூர்த்தக்கால் நடும் விழா

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, மார்கழி, மாசி மாத திருவிழாக்கள் பிரசித்தி பெற்றவை. அதிலும் சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றது. இந்த திருவிழா வருகிற 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

அதற்கு முன்னோட்டமாக சித்திரை திருவிழாவிற்கான பந்தக்கால் முகூர்த்த விழா எனும் கொட்டகை முகூர்த்த விழா நேற்று நடந்தது. கீழமாசிவீதி தேரடியில் நேற்று காலை 9.30 மணிக்கு மேல் 9.59 மணிக்குள் பட்டர்கள் சிறப்பு பூஜை செய்து முகூர்த்தக்கால் நட்டனர். அதை தொடர்ந்து சித்திரை திருவிழாவுக்கு கோவிலில் பந்தல் அமைக்கும் பணிகள் நேற்று முறைப்படி தொடங்கின.

சித்திரை திருவிழா தொடக்கம்

இந்தாண்டு சித்திரை விழாவில் வருகிற 30-ந் தேதி முக்கிய நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், மே 1-ந் தேதி திக்கு விஜயமும் நடைபெறுகிறது.

சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் மே 2-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் திருக்கல்யாண நிகழ்வுகள் மேற்கு, வடக்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறும். மே 3-ந் தேதி மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.

திருவிழா நாட்களில் மீனாட்சி-சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன் காலை, இரவில் 4 மாசி வீதிகளில் வலம் வந்து காட்சி அளிப்பார்கள்..

எனவே விட்டவாசல், அம்மன் சன்னதி தெரு, நான்கு மாசி வீதிகளிலும் போடப்படும் பந்தல்கள், வேப்பிலை தோரணங்கள் சுவாமி வாகனங்களை தட்டாதவாறு 30 அடி உயரத்திற்குமேல் அமைக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மாலைகள்-பட்டு பரிவட்டங்கள்

சித்திரை திருவிழாவில் சுவாமி வீதி உலா வரும் நேரங்களில் பக்தர்களால் சுவாமிக்கு சாத்துப்படி செய்ய இறைவனுக்கு உகந்த மாலைகள் சாத்துப்படி செய்யலாம். ஆனால் கேந்திப்பூ, மருதை வேர்கள் வைத்து கட்டப்பட்ட மாலைகள் சாத்துப்படிக்கு ஏற்று கொள்ளப்படமாட்டாது. திருக்கல்யாணத்தன்று மூலஸ்தான அம்மன், சுவாமிக்கும், உற்சவர் அம்மன், சுவாமிக்கும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் மட்டுமே பட்டு பரிவட்டங்கள் சாத்தப்படும்.

உபயதாரர் மற்றும் பக்தர்கள் வழங்கும் காணிக்கை பரிவட்டங்கள் வாமாலையாக சூட்டப்படும். இந்த உற்சவம் தொடக்கம் முதல் அழகர்கோவில் கள்ளழகர் திருவிழா முடியும் 10-ந் தேதி வரை கோவில் சார்பாகவோ, உபயதாரர்கள் சார்பாகவோ உபய திருக்கல்யாணம், தங்கரதம் உலா ஆகிய சேவை பதிவு செய்து நடத்தப்படுவதில்லை என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரசீது பெற வேண்டும்

திருவிழாவில் நன்கொடையாளர்கள் பக்தர்களுக்கு இலவசமாக வழங்க விரும்பும் தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கெட் பாக்கெட்டுகள், மஞ்சள் கயிறு, குங்குமம் மற்றும் இதர அனைத்து பொருட்களையும் கோவில் அலுவலகத்தில் நேரடியாக வழங்கி உரிய ரசீது பெற்றுக்கொள்ளலாம். இந்த பொருட்கள் தொடர்பாக எந்த ஒரு தனி நபரிடமோ, நிறுவனத்திடமோ தொடர்பு கொள்ள வேண்டாம். அவ்வாறு யாரேனும் தனிப்பட்ட நபர்கள் அணுகினால் கோவில் நிர்வாகத்திடமும், 0452-2349868, 2344360 என்ற எண்ணிலும் புகார் அளிக்கலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story