நாகர்கோவில் அருகே பரபரப்பு சம்பவம்: ஸ்கூட்டரில் சென்ற இளம்பெண்ணுக்கு சரமாரி அரிவாள் வெட்டு;நடுரோட்டில் காதல் கணவர் வெறிச்செயல்


நாகர்கோவில் அருகே பரபரப்பு சம்பவம்: ஸ்கூட்டரில் சென்ற இளம்பெண்ணுக்கு சரமாரி அரிவாள் வெட்டு;நடுரோட்டில் காதல் கணவர் வெறிச்செயல்
x

நாகர்கோவில் அருகே ஸ்கூட்டரில் சென்ற இளம்பெண்ணை நடுரோட்டில் வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டிய காதல் கணவரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி

மேலகிருஷ்ணன்புதூர்,

நாகர்கோவில் அருகே ஸ்கூட்டரில் சென்ற இளம்பெண்ணை நடுரோட்டில் வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டிய காதல் கணவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

காதல் திருமணம் கசந்தது

நாகர்கோவில் அருகே உள்ள கீழ மறவன்குடியிருப்பை சேர்ந்தவர் சோனியா (வயது 32). கன்னியாகுமரி அருகே உள்ள ஒற்றையால்விளை பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ் (38). இவர்கள் 2 பேரும் கடந்த 14 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு அபினாஷ் (12), அபி நிஷாந்த் (10) என்ற 2 மகன்கள் உள்ளனர். திருமணமான சில வருடங்கள் சோனியாவும், ஜெயராஜிம் மிகவும் சந்தோசமாக வாழ்ந்து வந்தனர். பிறகு அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி சண்டை போட்டு வந்ததாக தெரிகிறது.

ஒரு கட்டத்தில் காதல் திருமணம் கசந்து போனது. இதனால் சோனியா கடந்த 4 வருடங்களுக்கு முன்பு ஜெயராஜை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்தார். மேலும் இதுதொடர்பாக விவாகரத்து வழக்கும் கோர்ட்டில் நடந்து வருகிறது.

மனைவிக்கு அரிவாள் வெட்டு

இதனை தொடர்ந்து சோனியா ஈத்தாமொழி அருகே உள்ள மணியன்விளையில் 2 மகன்களுடன் வசித்தார். ஜெயராஜ் ஆட்டோ ஓட்டி வந்தார்.

இந்தநிலையில் நேற்று மாலையில் தன்னுடைய இளைய மகன் அபி நிஷாந்த்துடன் சோனியா சுசீந்திரம் ஆஸ்ரமம் சந்திப்பில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஆட்டோவில் வந்த ஜெயராஜ், சோனியா சென்ற ஸ்கூட்டரை வழிமறித்து நிறுத்தியுள்ளார். பின்னர் வழக்கை வாபஸ் பெற்று விட்டு தன்னுடன் சேர்ந்து வாழும்படி சோனியாவிடம் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஜெயராஜ் ஆட்டோவில் வைத்திருந்த அரிவாளை எடுத்து வந்து சோனியாவை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்.

ஆஸ்பத்திரியில் அனுமதி; கணவர் கைது

தலை, கை, கால், முதுகு உள்ளிட்ட பல இடங்களில் வெட்டு விழுந்தது. அப்பா அம்மாவை விட்டுறங்க, விட்டுறங்க என அபி நிஷாந்த் கதறி அழுததையும் பொருட்படுத்தாமல் ஜெயராஜ் ஆத்திரம் தீர சோனியாவை வெட்டினார். இதனால் ரத்த வெள்ளத்தில் அவர் சுருண்டு விழுந்தார்.

நடுரோட்டில் நடந்த தாக்குதலை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள், ஜெயராஜை மடக்கி பிடித்து சுசீந்திரம் போலீசில் ஒப்படைத்தனர்.

மேலும் உயிருக்கு போராடிய சோனியாவை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இதுதொடர்பாக சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாயிலெட்சுமி கொலை முயற்சி உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜெயராஜை கைது செய்தார். நடுரோட்டில் மனைவியை சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story