திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கோவிலில் தரிசனம் செய்ய முதியோர்களுக்கு தனி பாதை


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கோவிலில் தரிசனம் செய்ய   முதியோர்களுக்கு தனி பாதை
x

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முதியோர்கள் சாமி தரிசனம் செய்ய தனி பாதை நேற்று முதல் திறக்கப்பட்டது. நாழிக்கிணற்றில் கட்டணமின்றி நீராடும் முறையும் அமலுக்கு வந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முதியோர்கள் சாமி தரிசனம் செய்ய தனி பாதை நேற்று முதல் திறக்கப்பட்டது. நாழிக்கிணற்றில் கட்டணமின்றி நீராடும் முறையும் அமலுக்கு வந்தது.

முதியோர்களுக்கு தனி பாதை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த மார்ச் மாதம் முதல் இலவச பொது தரிசனம் மற்றும் ரூ.100 கட்டண தரிசனம் என இரண்டு வழிகளில் மட்டுமே பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து வந்தனர். இதனால் விழா நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்கள் பல மணி நேரம் காத்து நின்று தரிசனம் செய்தனர். மேலும் முதியோர்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

இதை கருத்தில் கொண்டு முதியோர்களுக்கு தனி பாதை அமைக்க இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்தது. இதையடுத்து 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் எளிதாக சென்று சாமி தரிசனம் செய்யும் வகையில் கோவில் நிர்வாகம் சார்பில் சண்முக விலாசம் மண்டபத்தில் உள்ள துலாபாரம் வாசல் அருகே தனி பாதை அமைக்கப்பட்டது.

அமைச்சர் திறந்து வைத்தார்

இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு முதியோர்கள் செல்லும் பாதையை 'ரிப்பன்' வெட்டி திறந்து வைத்தார். பின்னர் முதியோர்கள் அந்த பாதை வழியாக சென்று சாமி தரிசனம் செய்ய வழியனுப்பி வைத்தார்.

அந்த பாதையில் செல்லும் முதியவர்கள் தங்கள் வயதை உறுதிப்படுத்தும் வகையில் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் அல்லது ஓட்டுனர் உரிமம் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை காண்பித்து விட்டு இலவசமாக தரிசனம் செய்ய செல்லலாம். மேலும் அவ்வாறு செல்லும் முதியவருக்கு துணைக்காக ஒருவர் மட்டும் அவருடன் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிகழ்ச்சியில், கோவில் இணை ஆணையர் கார்த்திக், விடுதி மேலாளர் சிவநாதன், உள்துறை கண்காணிப்பாளர் ராஜேந்திரன், உள்துறை மேலாளர் விஜயன், உதவி பாதுகாப்பு அலுவலர் ராமச்சந்திரன், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, துணைத்தலைவர் செங்குழி ரமேஷ், மாவட்ட தி.மு.க. அவைத்தலைவர் அருணாச்சலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாழிக்கிணறு

திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நாழிக்கிணறு தீர்த்தத்தில் குளிப்பதற்கும், வள்ளி குகையில் தரிசனம் செய்வதற்கும் ஒரு ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த கட்டண முறைகள் ரத்து செய்யப்படுவதாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்து இருந்தார்.

அதன்படி, நாழிக்கிணறு மற்றும் வள்ளி குகைக்கு கட்டணம் இன்றி செல்லும் நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதிகாலை முதலே பக்தர்கள் நாழிக்கிணற்றில் இலவசமாக குளித்ததுடன் வள்ளி குகையிலும் தரிசனம் செய்தனர்.


Next Story