என்எல்சியில் பணிபுரிவதற்கு நிலம் வழங்கியவர்களின் வாரிசுகள் தேர்வு எழுத சிறப்பு பயிற்சி


என்எல்சியில் பணிபுரிவதற்கு  நிலம் வழங்கியவர்களின் வாரிசுகள் தேர்வு எழுத சிறப்பு பயிற்சி
x

என்எல்சியில் பணிபுரிவதற்கு நிலம் வழங்கியவர்களின் வாரிசுகள் தேர்வு எழுத சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

கடலூர்

நெய்வேலி,

நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் சுரங்கங்களில் பணிபுரிவதற்காக சுரங்க பொறியியல் துறையில் பட்டயம் பெற்றவர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். இதில் ஜூனியர் ஓவர் மேன், ஜூனியர் நில அளவையர், மைனிங் சர்தார் ஆகிய 3 பதவிகளில் மொத்தம் 192 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் மைனிங் சர்தார் பதவிக்கு மாத ஊதியம் ரூ.55 ஆயிரமும், இதர பணிகளுக்கு ரூ.65 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது.

இதுபோன்ற பதவிகளில் நிறுவனத்துக்கு நிலம் வழங்கியவர்களை பணியமர்த்த வேண்டும் என்கிற நோக்கத்தில், என்.எல்.சி. நிறுவனம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்து சுரங்க பொறியியல் துறையில் 3 ஆண்டு பட்டப்படிப்பை நடத்தி வருகிறது.

இதில் மொத்தம் உள்ள இடங்களில் 50 சதவீதம் நிலம் வழங்கியவர்களுக்கும், அவர்களின் வாரிசுகளுக்கும் மட்டுமே வழங்கப்படுவதுடன், இதற்கான கல்வி கட்டணத்தில் 50 சதவீதத்தை நிறுவனமே செலுத்தி வருகிறது.

இந்த நிலையில், நிறுவனத்துக்கு நிலம் வழங்கியவர்களின் வாரிசுகள், அதாவது நிறுவனத்தின் மூலம் கல்வி பயின்றவர்கள் தற்போதைய பணியமர்த்தலில் 20 மதிப்பெண்கள் போனசாக வழங்கப்பட இருக்கிறது. மேலும் நிலம் கொடுத்தவர்களின் வாரிசுகளுக்கு சிறப்பு பயிற்சியையும் நிறுவனம் வழங்குகிறது.

இதற்காக ஜி.வி.டி.சி. எனப்படும் குழு பயற்சி வளாகத்தில் இதற்கான பயிற்சியை நிறுவனத்தின் செயல் இயக்குனர் ராஜசேகர் ரெட்டி தொடங்கி வைத்தார். ஒரு வாரகாலம் நடைபெற இருக்கும் இப்பயிற்சியில் மேற்கூறிய பதவிகளுக்கு விண்ணப்பித்து உள்ள நிலம் கொடுத்தவர்களின் வாரிசுகள் மொத்தம் 43 பேர் பங்கேற்று இருக்கிறார்கள். இந்த பதவிகளுக்கு விண்ணிப்பிக்க கடைசி நாள் இந்த மாதம் இறுதி வரையில் இருப்பதால், விண்ணப்பிக்க விரும்புபவர்கள், பயிற்சியில் பங்கேற்க இருப்பவர்களின் எண்ணிக்கையும் மேலும் அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிகழ்ச்சியில் என்.எல்.சி. இந்தியா நிறுவன முதல் சுரங்கத்தின் தலைமை பொது மேலாளர் விஜயகுமார் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story