புகையிலை பொருள் விற்றவர் கைது
ஜோலார்பேட்டையில் புகையிலை பொருள் விற்றவர் கைது செய்யப்பட்டார். கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போதைப் பொருள் விற்பனை குறித்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையில் நேற்று ஜோலார்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஜோலார்பேட்டை அசோக் நகர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 65) என்பவர் நடத்தி வரும் மளிகைக் கடையில் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட பொருட்கள் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடையில் போலீசார் சோதனை செய்ததில் ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்பனைக்காக வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தனர். மேலும் நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நகராட்சி அலுவலர்கள் மற்றும் வருவாய் துறையினர் கடைக்கு 'சீல்' வைத்தனர்.