ஆறாத வடுவை ஏற்படுத்திய சுனாமி:குமரி கடற்கரை கிராமங்களில் இன்று18-ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி
குமரி கடற்கரை கிராமங்களில் சுனாமியின் தாக்கம் ஆறாத வடுவாக உள்ளது. இந்த சுனாமி தாக்கிய 18-ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.
குளச்சல்:
குமரி கடற்கரை கிராமங்களில் சுனாமியின் தாக்கம் ஆறாத வடுவாக உள்ளது. இந்த சுனாமி தாக்கிய 18-ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.
சுனாமி பேரலை தாக்குதல்
கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு கடல் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி என்ற ஆழிப்பேரலையானது இந்தியா, இந்தோனேசியா உள்பட 14 நாடுகளில் கடற்கரையோரம் வசித்தவர்களை வாரி சுருட்டியது.
இதில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 866 பேர் பலியானார்கள். 43 ஆயிரத்து 786 பேர் காணாமல் போனார்கள். இதில் குமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமங்களும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டதோடு ஏராளமானவர்கள் உயிரிழந்தனர் அது ஆறாத வடுவாக மாறி உள்ளது.
கொட்டில்பாடு
கொட்டில்பாடு மீனவர் கிராமத்தில் 199 பேர் பலியானார்கள். அவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டனர். அங்குள்ள நினைவு ஸ்தூபியில் அவர்களின் உறவினர்கள் இன்று (திங்கட்கிழமை) மலர் தூவி மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலி செலுத்துகிறார்கள்.
இதையொட்டி இன்று காலை 7 மணிக்கு சுனாமியில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பங்கு தந்தை ராஜ் தலைமையில் மவுன ஊர்வலம் குழந்தை ஏசு காலனியில் இருந்து நடைபெறும்.
பின்னர் இறந்தவர்கள் நினைவாக கொட்டில்பாடு புனித அலெக்ஸ் ஆலயத்தில் பங்குத்தந்தை தலைமையில் நினைவு திருப்பலி நடைபெறும்.
குளச்சல்
குளச்சல் பகுதியில் மட்டும் 414 பேர் பலியானார்கள் அவர்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்யபட்டனர். அவர்களின் நினைவாக குளச்சல் காணிக்கை மாதா ஆலய வளாகத்தின் அருகில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது. அங்கு இன்று இரவு 7 மணிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பங்கு தந்தை டைனி சியூஸ் தலைமையில் நடை பெறுகிறது.
அதற்கு முன்பு குளச்சல் காணிக்கை மாதா ஆலயத்தில் இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய திருப்பலி நடைபெறும்.
முஸ்லிம்கள்
இதேபோல் சுனாமிக்கு குளச்சல் பகுதியை சேர்ந்த சுமார் 30- க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பலியானார்கள் அவர்கள் அனைவரும் குளச்சல் ரிபாய் பள்ளி வளாகத்தில் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டனர்.
இதுதவிர மணக்குடி, அழிக்கால், சொத்தவிளை, பிள்ளைத் தோப்பு, ராஜாக்கமங்கலம்துறை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளிலும் சுனாமி ஆழிப்பேரலை பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளது.
எனவே அந்தந்த பகுதியில் உள்ள நினைவிடங்களில் உறவினர்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர்.