வளமும், வறட்சியும் நிறைந்த திண்டுக்கல்லுக்கு இன்று 38-வது பிறந்தநாள்
வளமும், வறட்சியும் நிறைந்த திண்டுக்கல் மாவட்டத்துக்கு இன்று 38-வது பிறந்தநாள் ஆகும்.
இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் தமிழகத்தின் பங்கு அளப்பரியது. தமிழக வீரத்தின் விளைநிலங்களில் திண்டுக்கல்லும் ஒன்றாகும். ஆங்கிலேயர்களை விரட்ட பல திட்டங்களை வகுத்த இடமாக திண்டுக்கல் விளங்கியது.
எழில் கொஞ்சும் மலைகள்
இதற்கு திண்டுக்கல் மலைக்கோட்டை வரலாற்று சான்றாக நிற்கிறது. எழில் கொஞ்சும் மலைகளை 3 திசைகளிலும் இயற்கை அரணாக பெற்றதும் திண்டுக்கல் தான். இதனால் விவசாயம் மட்டுமின்றி பிற தொழில்களும் நிறைந்த மாவட்டமாக திகழ்கிறது. 38 ஆண்டுகளுக்கு முன்பு ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தின் ஒரு பகுதியாக திண்டுக்கல் இருந்தது. கடந்த 15.9.1985 அன்று மதுரை மாவட்டத்தில் இருந்து திண்டுக்கல் பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக உதயமானது. திண்டுக்கல்லின் முதல் கலெக்டர் மாதவன் நம்பியார் ஆவார். அண்ணா மாவட்டம், காயிதே மில்லத் மாவட்டம், மன்னர் திருமலை நாயக்கர் மாவட்டம் என பல்வேறு பெயர்களிலும் வெவ்வேறு காலகட்டங்களில் அழைக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் 6 ஆயிரத்து 266.64 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. திண்டுக்கல் தனி மாவட்டமாக உருவெடுத்தது முதல் வளர்ச்சியை பெற்று வருகிறது.
ஆன்மிக, சுற்றுலா தலங்கள்
மேலும் ஆன்மிகம், சுற்றுலா ஆகியவற்றை தன்னகத்தே கொண்ட மாவட்டங்களின் பட்டியலில் திண்டுக்கல்லும் இடம்பெற்று இருக்கிறது. அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவில், உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான 'மலைகளின் இளவரசி' கொடைக்கானல் ஆகியவை திண்டுக்கல்லுக்கு பெருமை சேர்ப்பவை ஆகும். இவை, அரசுக்கு நல்ல வருவாயை ஈட்டி தருகிறது.அதுமட்டுமின்றி திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில், அபிராமி அம்மன் கோவில், பேகம்பூர் பெரிய பள்ளிவாசல், புனித வளனார் பேராலயம், நத்தம் மாரியம்மன் கோவில், திருமலைக்கேணி முருகன் கோவில், வத்தலக்குண்டு பள்ளிவாசல், தாடிக்கொம்பு சவுந்தரராஜபெருமாள் கோவில், வடதுரை சவுந்தரராஜபெருமாள் கோவில் உள்பட பல்வேறு ஆன்மிக தலங்களும் உள்ளன. இதனால் வெளிமாவட்டங்களில் இருந்து பக்தர்களின் ஆன்மிக, சுற்றுலா பட்டியலில் திண்டுக்கல் இடம்பிடித்து விடுகிறது.
வாழை, பூண்டு சாகுபடி
விவசாய பூமியாக விளங்குவதால் வாழை, தென்னை, சின்னவெங்காயம், பூண்டு மற்றும் அனைத்து வகை காய்கறிகள், பூக்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் மார்க்கெட்டுகளில் இருந்து தமிழகம் மட்டுமின்றி கேரளாவுக்கும் காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதேபோல் பூக்கள் சாகுபடியில் 'தமிழகத்தின் ஹாலந்து' என திண்டுக்கல் அழைக்கப்படுகிறது. பண்டைய காலத்தில் இருந்தே மல்லிகைப்பூவுக்கு மதுரை பிரபலம் என்பார்கள். அந்த மல்லிகைப்பூ பயிரிடப்படும் இடமே, தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் நிலக்கோட்டையில் தான். (முன்பு அது மதுரை மாவட்டத்தில் இருந்தது).
அந்த வகையில் திண்டுக்கல், நிலக்கோட்டை ஆகிய ஊர்களில் உள்ள பூ மார்க்கெட்டுகளில் தினமும் 40 டன் அளவுக்கு பூக்கள் விற்பனையாகின்றன. தமிழகம், கேரளாவுக்கு இங்கிருந்து பூக்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. கேரள ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தின் பூக்கள் அதிகம் இடம்பிடிக்கிறது.
பூட்டு-பிரியாணி
ஒருகாலத்தில் திண்டுக்கல் என்றால் பூட்டு தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு திண்டுக்கல்லில் பூட்டு தொழில் பிரபலமாக இருந்தது. தற்போது திண்டுக்கல்லில் தயாராகும் பூட்டுக்கு மவுசு உள்ளது. ஆனால் தற்போது தொழில் தான் நலிவடைந்து வருகிறது. அது புத்துயிர் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பலரின் ஆவலாக உள்ளது.இன்றைய காலகட்டத்தில் திண்டுக்கல், பிரியாணிக்கும் பிரபலமாகி வருகிறது. இதனால் பிரியாணிக்கு என்றே பல ஓட்டல்கள் திறக்கப்பட்டு உள்ளன. மேலும் பல ஊர்களில் திண்டுக்கல் பிரியாணி என்று ஓட்டல்களுக்கு பெயர் வைக்கும் அளவுக்கு திண்டுக்கல்லும், பிரியாணியும் இணைந்து விட்டன. ரெயில், பஸ்களில் திண்டுக்கல் வழியாக செல்வோர் பிரியாணியை மறக்காமல் ருசி பார்த்து செல்கின்றனர்.
கைத்தறி சேலைகள்
கைத்தறி நெசவு தொழில் திண்டுக்கல்லில் பிரபலமாக உள்ளது. திண்டுக்கல், சின்னாளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கைத்தறிவு நெசவு தொழில் பரவலாக உள்ளது. அதிலும் சின்னாளப்பட்டி கைத்தறி சுங்குடி சேலைகளுக்கு பல நாடுகளில் வரவேற்பு உள்ளது. எனவே பல நாடுகளுக்கு கைத்தறி சுங்குடி சேலைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
சிறுமலையில் விளையும் பலா, மலை வாழைப்பழம் ஆகியவை சுவை மிகுந்தது. சிறுமலை வாழைப்பழத்துக்கு, திண்டுக்கல் மட்டுமின்றி பிற மாவட்ட மக்களும் அடிமையாக உள்ளனர். பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுகிறது. திண்டுக்கல்லுக்கு வரும் பலர் விரும்பி வாங்கி செல்வது சிறுமலை வாழைப்பழம்.இதனால் சுங்குடி சேலைகள், மலைப்பூண்டு, சிறுமலை வாழைப்பழம், பூட்டு போன்றவை புவிசார் குறியீடு பெற்றுள்ளன. இது திண்டுக்கல்லுக்கு மேலும் பெருமையை பெற்று தந்துள்ளது.
38-வது பிறந்தநாள்
இவ்வாறு பல்வேறு சிறப்புகளை பெற்ற திண்டுக்கல் மாவட்டத்துக்கு இன்று (வியாழக்கிழமை) 38-வது பிறந்த நாள் ஆகும். இந்த 38 ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சியை திண்டுக்கல் மாவட்டம் பெற்றிருக்கிறது. அதேநேரம் மக்கள் தொகையும், மக்களின் தேவையும் அதிகரித்து இருக்கிறது. எனவே வளர்ச்சியின் இலக்கு இன்னும் பூர்த்தியாகவில்லை.
இதற்கு திண்டுக்கல் மாநகராட்சிக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டம், ஆன்மிக தலமான பழனி, சுற்றுலா தலமான கொடைக்கானல், சிறுமலை ஆகியவற்றில் சுற்றுலா பயணிகளுக்காக கூடுதல் வசதிகளை மேம்படுத்துதல், விவசாயம் செழிக்க நீராதாரங்களை பெருக்குதல், குடிநீர் திட்டங்களை விரிவுபடுத்துதல், புதிய தொழிற்சாலைகளை உருவாக்குதல் என பல திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். இனிவரும் காலங்களில் பல நல்ல திட்டங்கள் மூலம் திண்டுக்கல் மேலும் வளர்ச்சி பெற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.