இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் இன்று ஆடி கடைசி வெள்ளி திருவிழா
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் இன்று ஆடி கடைசி வெள்ளி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் குவிந்தனர்.
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் இன்று ஆடி கடைசி வெள்ளி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் குவிந்தனர்.
ஆடி வெள்ளி திருவிழா
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் வைப்பாறும், அர்ச்சுனா நதியும் சந்திக்க கூடிய இடத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆடி மாதத்தில் நடைபெறக்கூடிய ஆடிக் கடைசி வெள்ளி திருவிழா மிகவும் முக்கியமான திருவிழாவாகும். இதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து விழாவில் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள்.
மேலும், அக்னி சட்டி எடுத்தும், பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபாடு செய்வார்கள்.
பக்தர்கள் குவிந்தனர்
இந்த வருடத்தின் ஆடி வெள்ளி திருவிழா கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, சிறப்பு அலங்காரம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடி கடைசி வெள்ளி திருவிழாவை முன்னிட்டு அம்மன் விதி உலா வரும் நிகழ்ச்சி இன்று(வெள்ளிக்கிழமை) மதியம் 2 மணிக்கு மேல் நடைபெறுகிறது.
முன்னதாக காலை 9 மணி முதல் 10 மணி வரையில் அம்மனுக்கு கும்ப பூஜை, யாக பூஜை நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், கோவில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். இந்த விழாவில் கலந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.