இன்று மகாளய அமாவாசையையொட்டி பவானி கூடுதுறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்


இன்று மகாளய அமாவாசையையொட்டி  பவானி கூடுதுறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
x
தினத்தந்தி 25 Sept 2022 1:00 AM IST (Updated: 25 Sept 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

பாதுகாப்பு ஏற்பாடுகள்

ஈரோடு

இன்று (ஞாயிற்றுக்கிழமை) மகாளய அமாவாசையையொட்டி பவானி கூடுதுறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் வரும் அமாவாசை, புரட்டாசி அமாவாசை, மார்கழி அமாவாசை நாட்களில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து பரிகார பூஜைகள் செய்வது வழக்கம். இதில் புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசைக்கு தனிச்சிறப்பு உண்டு.

இந்த நாட்களில் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் செய்தால் தங்களின் வாழ்வாதாரம் செழிக்கும் என்பது நம்பிக்கை. அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மகாளய அமாவாசை என்பதால் பவானி கூடுதுறையில் ஆயிரக்கணக்கானவர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பவானி கூடுதுறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கண்காணிப்பு கேமரா

பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு அமிர்தவர்ஷினி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, முருகையா ஆகியோர் முன்னிலையில் 25-க்கும் மேற்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் பரிகாரம் செய்ய வருபவர்கள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்புக்காக பவானி கூடுதுறை பகுதிகளில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது.

புனிதநீராட வசதி

தீயணைப்பு வாகனங்களுடன் வீரர்கள், ஆம்புலன்சுகளுடன் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

பரிகாரம் செய்துவிட்டு வருபவர்கள் பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் புனிதநீராடுவதற்கு வசதியாக ஆண், பெண்களுக்கு தனித்தனியாக தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வாகனங்கள் நிறுத்தும் வசதி மற்றும் பரிகாரம் செய்வதற்காக தனித்தனி திடல்கள் அமைக்கப்பட்டுள்ளன.


Next Story