இன்று மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி
கோத்தகிரி மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி இன்று மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடக்கிறது.
கோத்தகிரி
கோத்தகிரி கடைவீதியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 19-வது நாளான நேற்று காலை 11 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜை நடைபெற்றது. இதில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதியம் 1 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 3 மணிக்கு கோவில் மண்டபத்தில் புது கோத்தகிரி ஊர்மக்கள் பங்கேற்ற நீலகிரி ஆதிவாசி மக்களின் கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 11 மணிக்கு கோவிலில் இருந்து அக்கினி கம்பம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அக்கால் ஆற்றில் விடும் திருவிடையாற்றல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா, 11 மணிக்கு அபிஷேக, அலங்கார பூஜை, மதியம் 1 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 4 மணிக்கு மாரியம்மன் கும்பம் (கரகம்) நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா அழைத்துச் செல்லப்பட்டு டானிங்டன் கரும்பாலம் ஆற்றில் அம்மனை விடையனுப்பும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) பால்குட ஊர்வலம், மறு பூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது.