"சட்டப்பேரவை வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள் ஒரு கரும்புள்ளியாகிவிட்டது" - டிடிவி தினகரன்
தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள் ஒரு கரும்புள்ளியாகிவிட்டது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
ஆளுநர் உரையின்போது தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிகழ்ந்திருக்கும் சம்பவங்கள் துரதிஷ்டவசமானவை. தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள் ஒரு கரும்புள்ளியாகிவிட்டது.
ஆளுநர் உரையைத் தயாரித்து அச்சுக்கு அனுப்புவதற்கு முன்பே இந்தக் கருத்து வேறுபாடுகளை ஆளுநர் மாளிகையும், அரசும் சரிசெய்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் விட்டதால்தான் சட்டப்பேரவையில் விரும்பத்தகாத நிகழ்வுகள் அரங்கேறியிருக்கின்றன.
அறிஞர் அண்ணா சொன்னதைப் போல, ஆளுநர் பதவி தேவையில்லை என்பதுதான் எங்களுடைய நிலைபாடு. அதே நேரத்தில், அரசியல் சட்டப்படி, அந்தப் பதவி இருக்கும் வரை அதிலிருப்பவருக்கு அரசு உரிய மரியாதை கொடுக்க வேண்டியது அவசியம்.
இதைப்போன்றே, மரபுகளை உடைத்துவிட்டு, சட்டப்பேரவையை அவமதிக்கும் வகையில் ஆளுநர் நடந்துகொண்டதும் சரியானதல்ல. ஆளுநருக்கும், தி.மு.க அரசுக்கும் இடையே தொடரும் இத்தகைய மோதல்போக்கு ஜனநாயகத்தை பலவீனப்படுத்துவதோடு மக்களுக்கும், மாநிலத்துக்கும்தான் பாதிப்பை ஏற்படுத்தும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.