கீழ்வேளூரில், பொதுக்கழிவறை நவீன முறையில் மறுசீரமைப்பு
மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தில் கீழ்வேளூரில் பொது கட்டண கழிவறை நவீன முறையில் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. புகார் தெரிவிக்க கியூ.ஆர். கோடு வசதி செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தில் கீழ்வேளூரில் பொது கட்டண கழிவறை நவீன முறையில் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. புகார் தெரிவிக்க கியூ.ஆர். கோடு வசதி செய்யப்பட்டுள்ளது.
'டாய்லட் 2.0' போட்டி
மத்திய அரசு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 'டாய்லட் 2.0' என்ற போட்டியை அறிவித்து இருந்து. இதில் பொதுக்கழிவறைகளின் தற்போதைய நிலை குறித்து இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. மேலும் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் வசம் உள்ள கழிவறையை தனியார் நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள் பங்களிப்புடன் புனரமைத்து கழிவறையை மேம்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பிப்ரவரி மாதம் 15-ந் தேதிக்குள் கழிவறைகளை மேம்பாடு செய்து மாற்றி அமைத்து மீண்டும் அதன் நிலைமையை இணைய தளத்தில் பதிவேற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியது.
பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது
'டாய்லட் 2.0' போட்டியில் கீழ்வேளுர் பேரூராட்சி கலந்து கொண்டது. அதன்படி பேரூராட்சி 3-வது வார்டு வடக்கு வீதியில் பேரூராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும், கட்டண கழிவறை நவீன முறையில் மறுசீரமைப்பு செய்யப்பட்டது.
தனியார் ஆர்கிடெக் கல்லூரி மாணவர்கள் கழிவறையின் தோற்றத்தை எழில்மிகு வடிவில் மாற்றி அமைத்துள்ளனர். மத்திய அரசு அறிவித்த போட்டியின் கடைசி நாளான நேற்று (பிப்ரவரி 15-ந் தேதி) மறுசீரமைப்பு செய்யப்பட்ட பொதுக் கழிவறை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
என்ன என்ன வசதிகள்?
மறுசீரமைக்கப்பட்ட கழிவறையில் பல்வேறு நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மெயின் சாலையில் இருந்து சற்று உள் பகுதியில் இருந்த கழிவறைக்கு செல்லும் வழி சேறும் சகதியுமாக இருந்தது. இதையடுத்து கழிவறை செல்லும் நடை பாதையில் கற்கள் பதிக்கப்பட்டு, கழிவறை பற்றிய வசதிகளுடன் விளம்பர பலகை அமைக்கப் பட்டுள்ளது.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள், திருநங்கை மற்றும் மாற்றுத் திறனாளிகள் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் கழிவறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
எந்திரங்கள்
கைகளை சுத்தம் செய்ய திரவ சோப் எந்திரம், தானியங்கி நாப்கின் எந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. கழிவறையில் உள்ள குறைபாடுகள் குறித்து செல்போன் மூலம் புகார் தெரிவிக்க 'கியூ.ஆர். கோடு' வசதி செய்யப்பட்டுள்ளது. செல்போன் இல்லாதவர்கள் கருத்து தெரிவிக்க மின்னணு எந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. புகார் புத்தகமும் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் நறுமணமூட்டும் வசதி உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. கீழ்வேளூரில் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நவீன முறையில் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ள கழிவறையை கலெக்டர் அருண் தம்புராஜ் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பேரூராட்சி செயல் அலுவலர் குகன், பேரூராட்சி தலைவர் இந்திரா காந்தி, துணைத்தலைவர் சந்திரசேகரன், தாசில்தார் ரமேஷ்குமார், இளநிலை உதவியாளர் சித்திரகலா மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.