கழிப்பறையை சுத்தம் செய்த எம்.எல்.ஏ.


கழிப்பறையை சுத்தம் செய்த எம்.எல்.ஏ.
x

இலக்கியம்பட்டி அரசு மகளிர் பள்ளியில் கழிப்பறையை வெங்கடேஷ்வரன் எம்.எல்.ஏ. சுத்தம் செய்தார்.

தர்மபுரி

தர்மபுரி இலக்கியம்பட்டி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை என கூறி பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் கிருஷ்ணம்மாள் தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெற்றோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இலக்கியம்பட்டி அரசு பள்ளியில் வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு செய்தார். அப்போது பள்ளி கழிப்பறைகள் சுகாதார சீர்கேடாக இருப்பதை பார்த்த எம்.எல்.ஏ. அந்த பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் கிருஷ்ணம்மாளுடன் கழிவறை பகுதிக்கு சென்றார். அங்கு துர்நாற்றம் வீசியதால் பிரஸ், பிளீச்சிங் பவுடர், பினாயில் வாங்கி வரச்சொல்லி கழிப்பறையை அவர் சுத்தம் செய்தார். பின்னர் பள்ளிகளில் உள்ள கட்டிடங்களை ஆய்வு செய்தார். அப்போது பள்ளிகளில் பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்படாத கழிப்பறைகள் இருந்ததை கண்டறிந்தார். அப்பகுதி முழுவதும் கொசு அதிகமாக இருந்ததை கண்டறிந்து வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொண்டு பள்ளி முழுவதும் தூய்மையாக வைக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். இலக்கியம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று எம்.எல்.ஏ. கூறினார். இந்த ஆய்வின் போது மாவட்ட நிர்வாகிகள் சண்முகம், பாலகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story