4¾ லட்சம் ரேஷன் கார்டு தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு: வீடு, வீடாக டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது


4¾ லட்சம் ரேஷன் கார்டு தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு: வீடு, வீடாக டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 4 Jan 2023 12:15 AM IST (Updated: 4 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் முழுவதும் 4¾ லட்சம் ரேஷன் கார்டு தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க, வீடு, வீடாக டோக்கன் வழங்கும் பணி நேற்று தொடங்கியது.

பொங்கல் பண்டிகை

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ரேஷன் கார்டு தாரர்களுக்கு ரூ.1,000 ரொக்க பணம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீள கரும்பு ஆகியவை அடங்கிய தொகுப்பு பரிசாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை வருகிற 9-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 4 லட்சத்து 70 ஆயிரம் ரேஷன் கார்டு தாரர்களுக்கு பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கான பணிகளில் மாவட்ட கலெக்டர் சாந்தி உத்தரவின் பேரில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்குவதற்காக, கரும்பு கொள்முதல் செய்யும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக கூட்டுறவு துறையினர் விவசாய தோட்டங்களுக்கு நேரில் சென்று கரும்புகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

டோக்கன் வழங்கும் பணி

ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும்போது ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு ரேஷன் கார்டு தாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் தேதி குறிப்பிடப்பட்ட டோக்கன்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று தர்மபுரி மாவட்டம் முழுவதும் வீடு, வீடாக பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. ஒவ்வொரு பகுதியிலும் அந்தந்த ரேஷன் கடையில் பணிபுரியும் பணியாளர்கள் மூலம் இந்த டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. வருகிற 9-ந் தேதி முதல் தொடர்ந்து பொங்கல் பரிசு தொகுப்பு அந்தந்த ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story