அன்னதானத்துக்கு டோக்கன் முறை அமல்
பழனி முருகன் கோவிலில் அன்னதானத்துக்கு டோக்கன் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில், காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மலைக்கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தினமும் 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரையிலான பக்தர்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்தநிலையில் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் நடைபெறும் அன்னதானத்தில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்தது. இதனை தடுக்கும் வகையில் டோக்கன் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் பழனி முருகன் கோவிலிலும் டோக்கன் முறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி, கோவிலில் அன்னதானம் பெறுவதற்கு வரிசையில் நின்ற பக்தர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. ஒவ்வொருவருக்கும் தலா ஒரு டோக்கன் வீதம் வழங்கப்பட்டது.
இதன்மூலம் தினமும் நடைபெறும் அன்னதானத்தில் எத்தனை பக்தர்கள் பங்கேற்றனர் என்பதை தெரிந்து கொள்வதுடன், முறைகேடுகளை தடுக்க ஏதுவாக அமையும் என்று கோவில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.