கொத்தடிமை தொழிலாளர்கள் குறித்து புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்கள்


கொத்தடிமை தொழிலாளர்கள் குறித்து புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்கள்
x

கொத்தடிமை தொழிலாளர்கள் குறித்து புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை

கொத்தடிமை தொழிலாளர்கள் குறித்து புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருவண்ணாமலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சீ.மீனாட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கூட்டாய்வு

சென்னை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் முதன்மை செயலாளர், தொழிலாளர் ஆணையர், திருவண்ணாலை மாவட்ட கலெக்டர் ஆகியோர் அறிவுரையின் படி வருவாய்த் துறை அலுவலர்கள், தொழிலாளர் துறை அலுவலர்கள், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் மற்றும் போலீசார் மூலம் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் கடந்த பிப்ரவரி மாதத்தில் செங்கம் பகுதியில் செங்கல் சூளையில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த 15 வயது வளரிளம் பருவத் தொழிலாளர் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டார்.

மேலும் மார்ச் மாதத்தில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டத்தில் திருவண்ணாமலை மேல்பள்ளிப்பட்டு கிராமத்தில் ஆடு மேய்க்கு தொழிலில் ஈடுபட்ட 13 வயது சிறுவன் கொத்தடிமை தொழிலாளராக கண்டறியப்பட்டு மீட்கப்பட்டான். மேலும் பணிக்கு அமர்த்திய உரிமையாளரின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கட்டணமில்லா எண்கள்

எனவே குழந்தை மற்றும் கொத்தடிமை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவது கண்டறியும் நேர்வில் பணிக்கு அமர்த்திய உரிமையாளர்களின் மீது குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர்கள் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் மற்றும் கொத்தடிமை தொழிலாளர் முறை (ஒழிப்பு) சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படும் என அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கைப்படுகிறது.

குழந்தை மற்றும் கொத்தடிமை தொழிலாளர்கள் குறித்து எளிதில் புகார் தெரிவிக்கும் வகையில் பொதுமக்கள் எளிதில் நினைவில் வைத்து கொள்ள ஏதுவாக பி.எஸ்.என்.எல். மூலம் 155214 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் குழந்தை மற்றும் கொத்தடிமை தொழிலாளர்கள் குறித்து புகார் அளிக்க ஏற்கனவே உள்ள 18004252650 என்ற எண்ணிலும், கூடுதலாக ஏற்படுத்தப்பட்டு உள்ள 155214 என்ற கட்டணமில்லா எண்ணிலும் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட மக்கள் புகார்களை பதிவு செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story