வைகுந்தத்தில் லாரி மோதி சுங்கச்சாவடி ஊழியர் சாவு
சங்ககிரி அருகே வைகுந்தத்தில் லாரி மோதி சுங்கச்சாவடி ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
சங்ககிரி:
சுங்கச்சாவடி ஊழியர்
சங்ககிரி அருகே வைகுந்தம் கணகச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் வேலு (வயது 24). இவர் வைகுந்தம் சுங்கச்சாவடியில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருடைய தாய்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் நேற்று காலை கார்த்திக் வேலு, வசந்தாவை மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு சங்ககிரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு சிகிச்சை பெற்ற பின்னர் அவர்கள் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர். வழியில் வைகுந்தம் சுங்கச்சாவடி அருகே முன்னால் கண்டெய்னர் லாரி சென்றது.
லாரி மோதி பலி
அப்போது திடீரென அந்த லாரி இடது புறமாக திரும்பியது. இதனால் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கார்த்திக் வேலு, வசந்தா ஆகியோர் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். கார்த்திக் வேலு படுகாயம் அடைந்தார். வசந்தா லேசான காயம் அடைந்தார்.
அங்கிருந்தவர்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சங்ககிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே கார்த்திக்வேலு பரிதாபமாக இறந்தார். வசந்தாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சோகம்
இதுகுறித்து தகவல் அறிந்த சங்ககிரி போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றுவிசாரணை நடத்தினர். பின்னர் கார்த்திக்வேலு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மெலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிரவிசாரணை நடத்தி வருகின்றனர்.
லாரி மோதி சுங்கச்சாவடி ஊழியர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.