வரத்து குறைந்ததால் தக்காளி விலை அதிகரிப்பு


வரத்து குறைந்ததால் தக்காளி விலை அதிகரிப்பு
x
தினத்தந்தி 11 Oct 2022 6:45 PM GMT (Updated: 11 Oct 2022 6:46 PM GMT)

ராயக்கோட்டை மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்ததால் தக்காளி விலை அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை:

ராயக்கோட்டை மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்ததால் தக்காளி விலை அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தக்காளி சாகுபடி

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளான எச்சனஅள்ளி, உடையாண்டஅள்ளி, சஞ்சலப்பட்டி, தொட்டதிம்மனஅள்ளி, எடவனஅள்ளி, கொப்பக்கரை, லிங்கணம்பட்டி உள்பட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. இந்த தக்காளியை விவசாயிகள் அறுவடை செய்து ராயக்கோட்டை கூட்ரோட்டில் உள்ள மார்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

இந்த மார்க்கெட்டில் தினமும் 10 முதல் 15 டன் வரை தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. தக்காளியை வாங்குவதற்க்காக சென்னை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், கோவை, சேலம், கரூர், திண்டுக்கல் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். கடந்த வாரம் 25 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.500 முதல் 600 வரை விற்பனை செய்யப்பட்டது.

விலை அதிகரிப்பு

தற்போது மழையால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்தது. இதனிடையே நேற்று 25 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.800 முதல் ரூ.850 வரை தரத்துக்கு ஏற்றவாறு விற்பனையானது. நேற்று சுமார் 7 டன் தக்காளி விற்பனை செய்யப்பட்டது. தக்காளி விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தற்போது மழை பெய்வதால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்ததால் தக்காளி விலை அதிகரித்துள்ளது என்று கூறினர்.


Next Story