தக்காளி விலை கடும் வீழ்ச்சி
தொடர் மழை காரணமாக தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ தக்காளி ரூ.8-க்கு விற்பனையானது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தொடர் மழை காரணமாக தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ தக்காளி ரூ.8-க்கு விற்பனையானது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தக்காளி விளைச்சல்
தர்மபுரி மாவட்டத்தில் விவசாயிகள் அதிகளவில் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர். மாவட்டம் முழுவதும் சுமார் 2,000 ஏக்கர் நிலப்பரப்பில் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான விவசாய குடும்பங்கள் தக்காளி பயிர் செய்வதன் மூலம் குடும்ப வருமானம் ஈட்டுகின்றனர். விவசாயிகள் தக்காளிகளை பெட்டிகளில் பதப்படுத்தி ராயக்கோட்டை, பாலக்கோடு, ஜிட்டாண்டஅள்ளி, வெள்ளிச்சந்தை, ஐந்து மைல்கள், தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
இந்த மார்க்கெட்டுகளில் தினமும் 90 முதல் 100 டன் வரை தக்காளி விற்பனைக்கு வருகிறது. இந்த சந்தையில் இருந்து உள்ளூர், வெளிமாவட்டங்கள் மற்றும் பெங்களூரு, சென்னை உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு வியாபாரிகள் தக்காளிகளை வாங்கி செல்கின்றனர்.
விலை வீழ்ச்சி
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மார்க்கெட்டுக்கு தக்காளியின் வரத்து அதிகரித்ததால் விலை குறைந்து விற்பனையானது. அதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் வயல்களில் மழைநீர் தேங்கியது. இதனால் செடியிலேயே தக்காளி அழுகியதால் மகசூல் பாதிக்கப்பட்டது. பயிரிடப்பட்ட தக்காளி பயிர்களை விவசாயிகள் உடனடியாக அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர் மழை, விளைச்சல் அதிகரிப்பால் மார்க்கெட்டுகளுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மார்க்கெட் நிலவரப்படி 15 கிலோ எடை கொண்ட ஒரு கூடை தக்காளி 450 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்பனையானது. வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.32 முதல் ரூ.35 வரை விற்பனையானது. தற்போது விலை வீழ்ச்சி அடைந்த நிலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.8-க்கு விற்பனையாகிறது.
விவசாயிகள் கவலை
தினசரி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்ததால் தக்காளியின் விலை கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் குறைந்துள்ளது. தர்மபுரி உழவர் சந்தையிலும் நேற்று ஒரு கிலோ தக்காளி விலை ரூ.8-க்கு விற்பனையானது. தக்காளி திடீர் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.