தக்காளி விலை கடும் வீழ்ச்சி


தக்காளி விலை கடும் வீழ்ச்சி
x
தினத்தந்தி 6 Nov 2022 12:15 AM IST (Updated: 6 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் சாலையோரம் கொட்டி செல்கின்றனர்.

தர்மபுரி

பாலக்கோடு:

பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் சாலையோரம் கொட்டி செல்கின்றனர்.

தக்காளி சாகுபடி

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, பெல்ரம்பட்டி, பேளாரஅள்ளி, பொப்பிடி, சென்னப்பன்கொட்டாய், மாரண்டஅள்ளி, தும்பலஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். இந்த பகுதிகளில் சாகுபடி செய்யும் தக்காளியை விவசாயிகள் அறுவடை செய்து பாலக்கோட்டில் உள்ள மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

இந்த மார்க்கெட்டுக்கு தினமும் சுமார் 300 டன் முதல் 500 டன் வரை தக்காளிகளை விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வருகின்றனர். இந்த தக்காளிகளை விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் வாங்கி சேலம், திருச்சி, கோவை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர்.

விலை வீழ்ச்சி

இந்தநிலையில் தொடர் மழை காரணமாக தற்போது தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் பாலக்கோடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. கடந்த சில வாரங்களாக ஒரு கிலோ ரூ.35 முதல் ரூ.38 வரை விற்பனையானது. மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் அதன் விலை சரிய தொடங்கியது.

இதனிடையே நேற்று காலை பாலக்கோடு மார்க்கெட்டில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ தக்காளி ரூ.6-க்கு விற்பனையானது. 15 கிலோ கொண்ட ஒரு கூடை தக்காளி ரகத்திற்கு ஏற்ப ரூ.90 முதல் ரூ.100 வரை விற்பனையானது. சில்லறை விற்பனை மற்றும் உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.8 முதல் ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது.

விவசாயிகள் கவலை

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பாலக்கோடு பகுதியில் இந்தாண்டு அதிக அளவில் மழை பெய்துள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். தற்போது தக்காளி விளைச்சல் அதிகரிப்பால் மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்துள்ளது. போதிய விலை கிடைக்காததால் தக்காளிகளை விவசாயிகள் மாடு, குரங்குகளுக்கு சாலையோரம் கொட்டி செல்கின்றனர். மேலும் பலர் தோட்டங்களில் பறிக்காமல் அப்படியே விட்டு விடுகின்றனர். மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


Next Story