தக்காளி, வெங்காயம் விலை தொடர்ந்து ஏறுமுகம்


தக்காளி, வெங்காயம் விலை தொடர்ந்து ஏறுமுகம்
x

ஈரோட்டில் தக்காளி, வெங்காயம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. நேற்று தக்காளி, வெங்காயம் ஒரு கிலோ ரூ.70-க்கு விற்பனை ஆனது.

ஈரோடு

ஈரோட்டில் தக்காளி, வெங்காயம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. நேற்று தக்காளி, வெங்காயம் ஒரு கிலோ ரூ.70-க்கு விற்பனை ஆனது.

தக்காளி

ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு 800-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகளும், 200-க்கும் மேற்பட்ட பழக்கடைகளும் செயல்பட்டு வருகின்றன. ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் இங்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைய தொடங்கி உள்ளது. இதன் எதிரொலியாக தக்காளி விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் 7 ஆயிரம் தக்காளி பெட்டிகள் விற்பனைக்கு வந்த நிலையில் தற்போது வெறும் 2 ஆயிரம் தக்காளி பெட்டிகள் விற்பனைக்கு வருகிறது. ஆந்திரா மாநிலம் குப்பம், கர்நாடக மாநிலம் கொள்ளேகால் ஆகிய பகுதியில் இருந்து நேற்று ஈரோட்டுக்கு தக்காளி விற்பனைக்கு வந்தது.

சின்ன வெங்காயம்

கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.50-க்கு விற்பனை ஆனது. நேற்று மேலும் விலை உயர்ந்து ஒரு கிலோ தக்காளி ரூ.60 முதல் 70 வரை விற்பனையானது. இதேபோல் சின்ன வெங்காயம் விலையும் தொடர்ந்து ஏறு முகத்தில் உள்ளது. நேற்று ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தக்காளி மற்றும் வெங்காயத்தை கிலோ கணக்கில் வாங்கிச்சென்ற பொதுமக்கள் விலை உயர்வு காரணமாக தற்போது ¼ கிலோ ½ கிலோ என வாங்கிச்செல்கின்றனர். கூட்டு, குழம்பு வைக்க முக்கியமாக தேவைப்படுவது வெங்காயம், தக்காளி தான். இதன் விலை தொடர்ந்து ஏறு முகத்தில் உள்ளதால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Related Tags :
Next Story