ரூ.20 கோடியில் கட்டப்பட்ட தக்காளி குளிர்பதன கிடங்கு பயன்பாட்டுக்கு வருவது எப்போது?-பாலக்கோடு விவசாயிகள் எதிர்பார்ப்பு
பாலக்கோடு:
பாலக்கோட்டில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தக்காளி மற்றும் விவசாய விளைபொருட்களை இருப்பு வைப்பதற்கான குளிர்பதன கிடங்கு விரைவில் பயன்பாட்டிற்கு வருமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
தக்காளி சாகுபடி
தர்மபுரி மாவட்டத்தில் விவசாய விளை பொருட்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படும் பகுதிகளில் ஒன்றாக பாலக்கோடு அமைந்துள்ளது. பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, வெள்ளிச்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இதேபோல் பல்வேறு வகையான காய்கறிகளும் இந்த பகுதிகளில் நன்றாக விளைகின்றன.
பாலக்கோடு வட்டாரத்தில் இருந்து தினமும் குறைந்தபட்சம் 500 டன் முதல் அதிகபட்சமாக 800 டன் வரை தக்காளி பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு லாரிகள் உள்ளிட்ட சரக்கு வாகனங்களில் அனுப்பப்படுகிறது. குறிப்பாக சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களுக்கு பாலக்கோடு பகுதியில் இருந்து தினமும் லாரிகளில் தக்காளி அனுப்பப்படுவது வழக்கம்.
குளிர்பதன கிடங்கு
இந்த பகுதியில் தக்காளி விளைச்சல் கணிசமாக அதிகரிக்கும் போது விலை வீழ்ச்சி ஏற்படுகிறது. அத்தகைய நேரங்களில் தக்காளிக்கு குறைந்தபட்ச விலை கூட கிடைக்காததால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பாலக்கோடு பகுதியில் தக்காளி உள்ளிட்ட விளைபொருட்களை இருப்பு வைக்க குளிர் பதன கிடங்கு வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் வேளாண் வணிகத்துறை மூலம் பாலக்கோட்டில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய குளிர்பதன கிடங்கு அமைக்கும் பணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது.
இங்கு தக்காளி, புளி, பிறவகை காய்கறிகள் ஆகியவற்றை இருப்பு வைத்து பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த குளிர்பதன கிடங்கு கட்டுமானபணி முடிவடைந்த நிலையில் இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை. இந்த குளிர்பதன கிடங்கை விரைவாக திறக்க வேண்டும். மேலும் இந்த கிடங்கை விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக விவசாயிகள், பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.