திருவாரூரில் தக்காளி விலை இரு மடங்கு உயர்வு
வெயிலால் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டதால் திருவாரூரில் தக்காளி விலை இருமடங்கு உயர்ந்து கிலோ ரூ.80-க்கு விற்பனை
திருவாரூர்:
வெயிலால் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டதால் திருவாரூரில் தக்காளி விலை இருமடங்கு உயர்ந்து கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது.
காய்கறி மார்க்கெட்
திருவாரூர் கடைவீதியில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் ஏராளமான கடைகள் உள்ளன. இந்த மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதே போல் திருவாரூரை சுற்றியுள்ள கிராமங்களில் விளையும், காய்கறிகள் வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
ஒசூர் தளிக்கோட்டை, கிருஷ்ணகிரி, திருச்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து தினமும் தக்காளி திருவாரூருக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படும். தற்போது கோடை காலம் முடிந்தும் வெயில் கொளுத்தி வருவதால் காய்கறிகள் விளைச்சல் பாதித்துள்ளது. இதனால் பெரும்பாலான காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது.
இருமடங்கு விலை உயர்வு
கடந்த வாரம் ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி இரு மடங்கு விலை உயர்ந்து நேற்று ரூ.80-க்கு விற்பனையானது. விலையை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த இல்லத்தரசிகள் தக்காளியை வழக்கமாக வாங்கும் அளவை விட குறைந்த அளவே வாங்கி சென்றனர். இதே போல் உணவகங்களுக்கும் தக்காளி குறைந்த அளவிலேயே வாங்கினர்.
இதே போல் மிளகாய், அவரை, பீன்ஸ், புடலங்காய் ஆகிய காய்கறிகள் விலையும் அதிகரித்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்ட மிளகாய் ரூ.80-க்கு விற்பனையானது. அவரைக்காய் ரூ.90-க்கும், பீன்ஸ் ரூ.110-க்கும், புடலங்காய் ரூ.50-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
விளைச்சல் பாதிப்பு
இதுகுறித்து காய்கறி வியாபாரி ஒருவர் கூறுகையில், கோடைகாலத்தில் கொளுத்திய வெயிலால் காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கமாக விற்பனைக்கு வரும் காய்கறிகளின் வரத்தைவிட குறைந்த அளவே வருகின்றன.
மார்க்கெட்டிற்கு காய்கறி வாங்க வருபவர்கள் தக்காளியின் விலையை கேட்டு சற்று யோசித்த பின்னரே குறைந்த அளவில் வாங்கி செல்கின்றனர். மற்ற காய்கறிகளை விட சமையலுக்கு தக்காளி முக்கியமானது என்பதால் எப்போதும், கிலோ கணக்கில் வாங்குபவர்கள், தற்போது தக்காளியை ½ கிலோ, ¼ கிலோ என்று அளவில் வாங்கி செல்கின்றனர்.
குறைவாக சாகுபடி
குறிப்பாக சென்ற ஆண்டு தக்காளி அதிக விலைக்கு போகாத காரணத்தினால் விவசாயிகள் தக்காளியை மூட்டை, மூட்டையாக எடுத்து சென்று ஆறுகளில் கொட்டி சென்றனர். இதனால் இந்த ஆண்டு நஷ்டம் ஏற்பட கூடாது என விவசாயிகள் தக்காளியை குறைவாக சாகுபடி செய்து உள்ளனர் என்றார்.