தக்காளி விலை கடும் வீழ்ச்சி
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு, கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து அதிகமாக உள்ளது. உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களிலும் இருந்தும் அதிக அளவில் தக்காளி வருகின்றன. இதனால் அவற்றின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளியின் விலை ரூ.50 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது. மொத்த விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.4-க்கு விற்கப்படுகிறது.
தக்காளி விலை வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மிகவும் குறைந்த விலைக்கு தக்காளி விற்பதால், காய் பறிக்கும் கூலி, வண்டி வாடகை, மற்ற செலவுகளுக்கு கூட பணம் கிடைக்காமல் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் புலம்பி வருகின்றனர். மேலும் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பலரும் தங்களது தோட்டங்களில் தக்காளியை பறிக்காமல் செடியிலேயே விட்டுள்ளனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு திண்டுக்கல் மட்டுமின்றி தேனி, கோவை, திருப்பூர், திருச்சி மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் தக்காளி வரத்தாகிறது. இதுதவிர ஆந்திராவில் இருந்தும் தக்காளி வருகிறது. இவ்வாறு வரத்து அதிகரித்ததால் தக்காளி விலை வீழ்ச்சியடைந்துள்ளது என்றனர்.