வரத்து குறைவால் தக்காளி விலை உயர்வு


வரத்து குறைவால் தக்காளி விலை உயர்வு
x
தினத்தந்தி 8 Jun 2023 12:30 AM IST (Updated: 8 Jun 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

அய்யலூர் சந்தையில் வரத்து குறைவால் தக்காளி விலை உயர்ந்தது. 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.400-க்கு விற்பனையானது.

திண்டுக்கல்

அய்யலூர் சந்தை

வடமதுரை மற்றும் அய்யலூர் பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தக்காளி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். தங்கள் தோட்டத்தில் விளையும் தக்காளிகளை அய்யலூர் ஏலச்சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். அங்கு தக்காளியின் தரத்திற்கு ஏற்ப ஏலம் விடப்படுகிறது.

இங்கு ஏலம் எடுத்து தக்காளிகளை வாங்கும் வியாபாரிகள் அங்கிருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இங்கு சுமாராக நாள் ஒன்றுக்கு 5 டன் வரை தக்காளி கொள்முதல் நடக்கிறது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக தக்காளியின் வரத்து அதிகமானதால் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்தது.

இதனால் 14 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டி ரூ.100 முதல் ரூ.180 வரை விற்பனை செய்யப்பட்டது. தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் தக்காளிகளை சாலையோரம் கொட்டிச் சென்றனர்.

விலை உயர்வு

இந்த நிலையில் தற்போது அய்யலூர் ஏலச்சந்தைக்கு தக்காளி வரத்து வழக்கத்தை காட்டிலும் மிகவும் குறைவாக வருவதால் தக்காளி விலை திடீரென அதிகரித்துள்ளது.

நேற்று 14 கிலோ கொண்ட ஒரு பெட்டியின் விலை தரத்திற்கு ஏற்ப ரூ.300 முதல் ரூ.400 வரை விற்பனை ஆனது. இதனால் தக்காளிகளை சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story