தக்காளி-சின்ன வெங்காயம் கிலோ ரூ.50-க்கு விற்பனை


தக்காளி-சின்ன வெங்காயம் கிலோ ரூ.50-க்கு விற்பனை
x
தினத்தந்தி 13 Aug 2023 1:45 AM IST (Updated: 13 Aug 2023 1:46 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் வரத்து அதிகரிப்பால் விலை சரிந்து தக்காளி-சின்னவெங்காயம் கிலோ ரூ50-க்கு விற்பனை ஆனது.

திண்டுக்கல்

சின்ன வெங்காயம்

சைவம், அசைவம் என எந்த உணவு தயாரிப்பதாக இருந்தாலும் தக்காளிக்கும், சின்னவெங்காயத்துக்கும் சிறப்பிடம் உண்டு. இவை ஒட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தைகள் போல சமையலில் ஜொலிக்கின்றன.

சுவையை கூட்டுவதிலும் தக்காளி, சின்ன வெங்காயம் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கிறது. இவையிரண்டும் இல்லாமல் பெரும்பாலான உணவே சமைக்க முடியாது. சில்லரை கடை முதல் மார்க்கெட் வரை தக்காளி, சின்ன வெங்காயம் இல்லாவிட்டால் காய்கறி விற்பனை நிறைவு பெறாது.

தக்காளி, சின்ன வெங்காயம் ஆகியவற்றின் அன்றாட தேவை அதிகமாக இருப்பதால் திண்டுக்கல் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பயிரிடப்படுகின்றன.

இதுமட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் அவை இறக்குமதி செய்யப்படுகின்றன. எனவே தக்காளி, சின்ன வெங்காயத்தின் விலை ஓரளவு கட்டுக்குள் இருக்கும்.

வரத்து குறைவு

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பருவமழை பொய்த்து போய் விட்டது. விளைநிலங்கள் வானம் பார்த்த பூமியாகி விட்டது. இதனால் காய்கறி சாகுபடி பரப்பளவு குறைந்து விட்டது. இதன் எதிரொலியாக, மார்க்கெட்டுக்கு காய்கறிகளின் வரத்தும் சரிந்தது.

குறிப்பாக தக்காளி, சின்ன வெங்காயம் ஆகியவற்றின் வரத்து வெகுவாக குறைந்தது. தமிழகத்தில் காய்கறி உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் திண்டுக்கல் மாவட்டத்தில் கூட தக்காளி, சின்னவெங்காயம் விளைச்சல் சரிந்து வரத்து குறைந்தது.

இதேபோல் வெளிமாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்தும் குறைந்த அளவே இறக்குமதி ஆனது. இதனால் தக்காளி, சின்ன வெங்காயத்தின் விலை மளமளவென உயர்ந்தது.

சதத்தை தாண்டிய தக்காளி

திண்டுக்கல்லில் ஒரு கட்டத்தில் ஒருகிலோ தக்காளி ரூ.120-க்கும், சின்ன வெங்காயம் கிலோ ரூ.140-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் சமையலில் அத்தியாவசிய பொருட்களாக இடம்பெற்ற தக்காளி, சின்ன வெங்காயத்தை பலர் மறந்து விட்டனர்.

'ஏழைகளின் ஆப்பிள்' என்று அழைக்கப்பட்ட தக்காளி, எட்டாக்கனியாகி விட்டது. சின்னவெங்காயத்தை உரிக்காமல், அதன் விலையை கேட்ட உடனேயே மக்கள் கண்ணீர் வடிக்க தொடங்கினர். சதத்தை தாண்டி இவையிரண்டும் இல்லத்தரசிகளை வதம் செய்தது.

கிலோ கணக்கில் தக்காளி வாங்கியவர்கள் கால் கிலோ, அரை கிலோ வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர். தக்காளிக்கு பதிலாக புளியையும், சின்ன வெங்காயத்துக்கு பதிலாக பெரிய வெங்காயத்தையும் சமையலுக்கு சேர்க்கும் நிலை ஏற்பட்டது.

கிலோ ரூ.50 ஆக சரிவு

இந்த நிலையில் தக்காளி, சின்ன வெங்காயம் ஆகியவற்றின் வரத்து கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியது. இதன் காரணமாக ரூ.100-க்கு மேல் விற்ற அவற்றின் விலை படிப்படியாக குறைய தொடங்கியது.

இதற்கிடையே நேற்று தக்காளி, சின்ன வெங்காயத்தின் விலை மேலும் சரிந்தது. அதன்படி நேற்றைய தினம் திண்டுக்கல்லில் தக்காளி, சின்ன வெங்காயம் கிலோ தலா ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை ஆனது.

தக்காளி, சின்ன வெங்காயத்தின் விலை குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதுமட்டுமின்றி கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கால் கிலோ, அரை கிலோ வாங்கிய மக்களில் பலர் நேற்றைய தினம் தலா 2 கிலோ தக்காளி, சின்ன வெங்காயம் வாங்கி சென்றதை பார்க்க முடிந்தது.


Next Story