இல்லத்தரசிகளுக்கு இனிப்பான செய்தி; ஒரு கிலோ தக்காளி ரூ.40-க்கு விற்பனை


இல்லத்தரசிகளுக்கு இனிப்பான செய்தி; ஒரு கிலோ தக்காளி ரூ.40-க்கு விற்பனை
x

பழனி மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து கிலோ ரூ.40-க்கு விற்கப்படுகிறது. விலை உயர்வு

திண்டுக்கல்

பழனி மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து கிலோ ரூ.40-க்கு விற்கப்படுகிறது.

விலை உயர்வு

'ஏழைகளின் ஆப்பிள்' என்று அழைக்கப்படும் தக்காளி, கடந்த சில வாரங்களாக ஆப்பிள் பழத்துக்கு நிகராக விலை அதிகரித்து காணப்பட்டது. நாடு முழுவதும் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்தது. ஒரு கிலோ ரூ.200-க்கு மேல் தக்காளி விலை போனதால் ஏழை, நடுத்தர மக்கள் சமையலில் தக்காளியை தவிர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

மேலும் சிலர் தக்காளியை குறைவான அளவில் மட்டும் வாங்கி பயன்படுத்தி வந்தனர். பல இடங்களில் 'பெட்ரோல் வாங்கினால் தக்காளி இலவசம்' என அறிவிக்கப்பட்டது. இந்த திடீர் விலையேற்றத்துக்கு வரத்து குறைவே காரணம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

இனிப்பான செய்தி

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதனால் அதன் விலையும் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. அதன்படி, பழனி தக்காளி மார்க்கெட்டில் நேற்று தக்காளி வரத்து அதிகரித்து காணப்பட்டதால் அதன் விலை வீழ்ச்சி அடைந்தது.

கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்ற நிலையில், நேற்று அதனை விலை ரூ.40 ஆக வீழ்ச்சியடைந்தது. இது தற்போது இல்லத்தரசிகளுக்கு இனிப்பான செய்தியாக அமைந்துள்ளது.

மார்க்கெட்டில் தக்காளி விலை குறைந்துள்ள போதிலும் தள்ளுவண்டி, சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.80 வரை விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

மேலும் குறையும்

தக்காளி விலை சரிந்தது குறித்து பழனியை சேர்ந்த வியாபாரி ஒருவர் கூறும்போது, "கடந்த வாரத்தில் பழனி மார்க்கெட்டுக்கு 25 முதல் 30 டன் தக்காளி வரத்து இருந்தது. அப்போது 14 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டி ரூ.1,500 வரை விற்பனை ஆனது. நேற்று பழனி மார்க்கெட்டுக்கு 45 முதல் 50 டன் தக்காளி வரத்தானது. இதனால் அதன்விலை பாதியாக விலை குறைந்தது. அதாவது 14 கிலோ தக்காளி பெட்டி ரூ.750 வரை விற்பனை ஆனது. பழனி மட்டுமின்றி திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட மார்க்கெட்டுக்கும் தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. எனவே வரும் நாட்களில் தக்காளி விலை மேலும் குறையும்" என்றார்.

தக்காளி விலை வீழ்ச்சியடைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story