சாலையோரத்தில் கொட்டப்படும் தக்காளிகள்


சாலையோரத்தில் கொட்டப்படும் தக்காளிகள்
x

விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை அடைந்து தக்காளிகளை சாலையோரத்தில் கொட்டி செல்கின்றனர்.

திண்டுக்கல்

தக்காளி சாகுபடி

திண்டுக்கல் மாவட்டத்தில் வடமதுரை, அய்யலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் தக்காளி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தங்களது தோட்டங்களில் விளைகிற தக்காளிகளை, அய்யலூர் ஏலச்சந்தைக்கு விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். அங்கு தக்காளியின் தரத்துக்கு ஏற்ப ஏலம் விடப்படுகிறது.

இங்கு ஏலத்தில் எடுக்கும் தக்காளிகளை, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு வியாபாரிகள் அனுப்பி வைக்கின்றனர். தினமும் இங்கு சுமார் 5 டன் வரை தக்காளி விற்பனை நடைபெறுகிறது.

விலைவீழ்ச்சி

இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. 14 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டி ரூ.50 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது.

தற்போது கோடை மழை பெய்து வருவதால், தக்காளியில் கரும்புள்ளி மற்றும் வெடிப்பு விழுந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தவிர ஆந்திரா, கர்நாடகா ஆகிய வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்துள்ளது.

இதன் எதிரொலியாக தக்காளி விலை மேலும் வீழ்ச்சி அடைந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி ரூ.50 முதல் ரூ.80 வரை நேற்று விற்பனை செய்யப்பட்டது.

விவசாயிகளுக்கு நஷ்டம்

தக்காளி செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி, மருந்து தெளித்து, உரமிட்டு வளர்த்து, கூலி ஆட்களை கொண்டு பறித்து, வாகனங்களில் ஏற்றி சந்தைக்கு கொண்டு சென்றால் உரிய விலை கிடைப்பதில்லை. இதனால் விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர்.

ஏலத்தில் விற்பனை ஆனது போக மீதமுள்ள தக்காளிகளை விவசாயிகள் தங்களது வீட்டுக்கு கொண்டு செல்வதில்லை. அந்த தக்காளிகளை விவசாயிகள் சாலையோரத்தில் கொட்டி செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. அய்யலூர் சந்தை அருகே சாலையோரத்தில் குவியல், குவியலாக தக்காளிகள் கொட்டப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது.

உணவு பூங்கா

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், அறுவடைக்கு தயாராக உள்ள தக்காளிகளை உடனுக்குடன் பறித்து விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் போதிய விலை கிடைப்பதில்லை. அய்யலூரில் தக்காளி பதப்படுத்தப்படும் உணவு பூங்கா அமைக்கும் பணி தொடங்கப்பட்டு தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதனை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அப்போது தான், விலைவீழ்ச்சி அடையும் நேரத்தில் தக்காளிகளை பதப்படுத்தி விற்பனை செய்ய முடியும். எனவே அய்யலூரில் கட்டப்பட்டு வரும் உணவு பூங்கா பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றனர்.


Next Story