செடிகளிலேயே பறிக்காமல் விடப்படும் தக்காளி


செடிகளிலேயே பறிக்காமல் விடப்படும் தக்காளி
x

விலை வீழ்ச்சியால் செடிகளிலேயே தக்காளியை பறிக்காமல் விவசாயிகள் விட்டுள்ளனர்.

திண்டுக்கல்

பழனி அருகே தொப்பம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார கிராம பகுதிகளில் காய்கறி சாகுபடி அதிகமாக நடந்து வருகிறது. குறிப்பாக தொப்பம்பட்டி, மரிச்சிலம்பு ஆகிய இடங்களில் சொட்டுநீர் பாசனம் மூலம் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இங்கு விளையும் தக்காளியை பறித்து பெட்டிகளில் வைத்து பழனி, ஒட்டன்சத்திரம் சந்தைகளில் வைத்து விவசாயிகள் விற்று வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாடு முழுவதும் தக்காளி விலை சதத்தை தாண்டி சாதனை படைத்தது. கிலோ ரூ.150-க்கு மேல் விற்றதால் நடுத்தர-பாமர மக்களின் எட்டாக்கனியாக இருந்தது.

அதன்பிறகு தக்காளி வரத்து அதிகரித்ததால், அதன் விலை படிப்படியாக குறைந்து வீழ்ச்சியை நோக்கி பயணித்தது. அதிலும் கடந்த சில நாட்களாக தக்காளி விலை அதலபாதாளத்துக்கு சென்று விட்டது. இதனால் சரக்கு வேன்களில் வைத்து விவசாயிகள் நேரடியாகவே விற்று வருகின்றனர். குறிப்பாக கிலோ ரூ.5-க்கு விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை வீழ்ச்சியால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு வேதனை அடைந்துள்ளனர். பறிப்பு கூலி கூட கிடைக்காததால், செடிகளில் பறிக்காமல் அப்படியே விட்டுள்ளனர்.

அந்த வகையில் தொப்பம்பட்டி, மரிச்சிலம்பு பகுதியில் பல தோட்டங்களில் தக்காளி பறிக்கப்படாமல் உள்ளது. இதுபற்றி விவசாயிகள் கூறும்போது, தக்காளி விலை குறைந்துள்ளதால் போதிய லாபம் இல்லை. அதை பறித்து விற்பனைக்கு அனுப்பினால் கூலி கூட கிடைப்பதில்லை. எனவே பறிக்காமல் அப்படியே விட்டுள்ளோம். மேலும் தக்காளிகளை கால்நடைகளுக்கு தீவனமாக கொடுத்து வருகிறோம் என்றனர்.


Next Story